8 செப்., 2012

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!நாடாளுமன்றத்தில் தொடர்ந்து மூன்றாம் நாளாக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

'இந்திய அரசே இராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே!', 'தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதே!' 'போர்க் குற்றவாளி இராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்காதே!' ஆகிய முழக்கங்கள் தாங்கிய அட்டைகளைக் கையிலேந்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதே இடத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தொல். திருமாவளவன் தனியொருவராய் நின்று இராஜபக்சே வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியது அவ்விடத் தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கே நடைபெறும் விழாவிற்கு திருமதி சுஷ்மா ஸ்வராஜ் இராஜபக்சேவை அழைத்திருப்பதால், தொல். திருமாவளவன் நடத்திய ஆர்ப்பாட்டம் அவ்விடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

'திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களே, போர்க்குற்றவாளி இராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்காதீர்கள்!' என்றும் தொல்.திருமாவளவன் முழக்கம் எழுப்பினார்.

அரை மணிநேர ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு சரியாக 11 மணியளவில் மக்களவை கூடியதும் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று மூன்றாவது நாளாக இன்றும் 'இராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைக்க வேண்டாம்' என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினார். ஓரிரு நிமிடங்களில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 12 மணிக்கு அவை கூடியதும் தொல்.திருமாவளவன் அதே முழக்க அட்டையை ஏந்திய வாறு மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே நின்று, "ஏழு கோடித் தமிழர்களின் உணர்வு களைக் காயப்படுத்தாதே! போர்க் குற்றவாளி இராஜபக்சேவை மத்திய பிரதேசத்திற்கு அழைக்காதே!" என்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் லிங்கமும் இதே கோரிக்கைகளை எழுப்பினார். மீண்டும் காலவரம்பின்றி அவை ஒத்தி வைக்கப்பட்டது.

சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் வருகையை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி நக்கீரன் 
தனி ஒருவராய் உணர்வை வெளிப்படுத்தும் திரு திருமாவளவன் அவர்களை வாழ்த்துவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக