4 செப்., 2012

புதுக்கவிதை தாத்தா மு .மேத்தா...

பெரிய குளத்தின் பீடுமிகும் கவிஞரே! உங்கள் இளம்வயதின் நினைவுகளை எங்களுக்குச் சொல்வீரா?

""வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவைதான். புழுதியில் புரண்ட பூக்களாக நாங்கள் இருந்தோம். அற்புதமான நல்ல நண்பர்கள் எனக்கு வாய்த் திருந்தார்கள். சிறகு முளைக்கும் முன்னே வானில் பறந்த பறவைகளைப்போல், எதுவும் அறியும் முன்னே நாங்கள் இலக்கியம் படைக்க ஆரம்பித்தோம். அந்த வயதில்தான் நான் அதிகம் படித்தேன். அரசியல் மேடைகளில் இளைய கதாநாயகனாக உலாவந்தேன். பெரியகுளம் விக்டோரியா நினைவு கழக உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவனாக பதவியில் இருந்தேன்.

அங்கே ஒரு மந்திரிசபை அமைத்தோம். மாணவர் தலைவர்தான் முதலமைச்சர். என் வாழ்வில் என் தந்தை எனக்குக் கொடுத்ததுதான் அதிகம். கேட்டது எதுவுமில்லை. பள்ளியில் நான் மந்திரிசபை அமைத்தபோது அவர் என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் குடும்ப வைத்தியரின் மகனை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். என் சகாக்களிடம் யோசித்துவிட்டுச் சொல்வதாக சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னேன். இறுதியில் என் நெஞ்சில் நிறைந்த தந்தையின் வேண்டு கோளை நிராகரித்தேன். சின்ன வயதிலேயே நேர்மைத் தராசை கையில் தூக்கிக்கொண்டு நடந்தேன். இன்றுவரை அந்தத் தராசை கீழே போட எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் சில சமயங்களில் நானே கீழே விழுந்து நொந்துபோக நேர்கிறது. ஆனால் அந்த காயங்களைத்தான் என் கௌரவங்கள் என்று கருதுகிறேன். எனக்கு வாய்த்த என்னுடைய நண்பர்களான ஆறுமுகம், முகமதுமைதீன், ஆறீஸ்வரன், வேலுச்சாமி, சிவஞானம், சிவநேசன், பாலகுமார் போன்றோர் லட்சியத்தோடு நான் வளர்வதற்கு உரமாக நின்றார்கள். வழிமாறாமல் உயர்வதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கினார்கள். இன்னும் பகிர எவ்வளவோ இருக்கின்றன.''

"ஈர விழிக் காவியங்கள்' எழுதி வெளியிட்டவரே!
எழுதி வெளியிட்டதனால் எவர் மனதைத் தொட்டீர்கள்?

"" இன்று ஏராளமான கவிதைகளை எழுதும் இளைஞர்களையும் அவற்றை வாசிக்கிற மூத்தவர்களையும் தொட்டேன். அவர்கள் நெஞ்சில் வேர்விட்டேன்.''




மரபுக் கவிதைகளால் மனம் மகிழ்ந்த நாயகரே!
புதுக்கவிதைக் காதலியைக் கரம்பிடித்ததெதனாலே?

""சமூகத்தில் குமுறல்களை வெளிப்படுத்த வேலியில்லாத ஒரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. சுவரேறிக் குதிப்பதற்கு பதிலாக சுவர்களைத் தகர்த்து விட்டு வானம்பாடிகளாய் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். "சொற்புதிது பொருள் புதிது வளம் புதிது ஜோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி பாடினானே, அவற்றைப் படைப் பதற்கு புதுக்கவிதை வாகனத்தில் பயணம் செய்தோம்.''

அழகுத் தமிழுக்கு ஆணிவேர் ஆனவரே!
உங்கள் தமிழுக்கு உயிர்வேராய் இருந்தவர் யார்?

""இளங்கோவும் வள்ளுவனும் கம்பனும் துருவ நட்சத்திரங்களாய் எனக்குத் திசைகாட்டினார் கள். பாரதியும் பாரதிதாச னும் எனக்குள் இசை மீட்டினார்கள். ஏழை எளிய மனிதர்கள் எனக்கு கவச உடை பூட்டி, தங்களுக்காகப் போரிட களத்தில் நிறுத்தினார்கள். கவிஞர் சிற்பி என் னைப் பற்றி இப்படி குறிப்பிடு வார்... "சமூகமே இக்கவிஞரின் ஆலயம். அதன் போர்க்களமே இவரின் கீதலயம்.''

கவிதைக்கு அழகு கற்பனையா?
இல்லை பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தானா?

""பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தான் எந்த இலக்கிய வடிவத்தையும் எழுச்சி பெறச் செய்கிறது. வண்டுகளாய் மட்டுமே சுற்றித் திரியாமல் வாள்களாகவும் வேல்களாகவும் மாறவேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை தீர்மானிக்கிறது.''

காதலே இல்லாத உலகத்தில் சில நாட்கள்
வாழச் சொன்னால் வாழ்வீரா சொல்லுங்கள்?

""வாழ்வேன். இதோ இப்போது உங்கள்முன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன். வெறும் வியாபாரிகளுக்கு மத்தியில் படைப்பாளிகளும் வாழத் தானே வேண்டியிருக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் பேச்சு நின்றுவிடும். அதுவரை பேசாதிருக்க இயலுமா?''

இந்த உலகை இயக்கும் சக்தி எதனிடம் உள்ளது? எடுத்துச் சொல்லுங்கள்?

""உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக் கும் சக்தி, எந்த பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளது.''

யுத்தக் களத்தில் வென்றவர்கூட
முத்தக் களத்தில் தோற்பது எதனால்?

""யுத்தக் களத்தில் எதிரி யார் என்பது தெரிகிறது. முத்தக் களத்தில் காதல் எது- மோதல் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.''

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் நீங்கள்
யாராகப் பிறக்க ஆசைப் படுவீர்கள்?

""இதில் நான் பிறவாமை வேண்டும் என்று கூறிய பெரியார் கட்சி.''

மனது நிரம்புவது மரபிலா? இல்லை
புதுக்கவிதை எழுதும் பொழுதிலா? சொல்லுங்கள்!

""கோப்பை நிரம்புவது வெந்நீரிலா தண்ணீரிலா என்று கேட்பதைப் போன்ற கேள்வி இது. மரபோ புதிதோ அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. மரபிலும் நல்ல கவிதைகள் உண்டு. புதுக்கவிதையிலும் வெறும் வசனங் கள் வந்துவிடுவதுண்டு. நல்ல கவிதைக்கு வடிவம் முக்கியம். இரண்டிலும் அது இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதையெல்லாம் சிறந்தது என்று கூறமுடியாது. அடடா என்று எது நம்மை மறந்து ஆனந்தமாய் அலற வைக்கிறதோ- அது நம் மனதை நிரப்பிவிட்டது என்று அர்த்தம்.?''

சிறகு முளைத்த எழுதுகோல் கொண்டவரே!
உங்கள் வானம் காதலா? சமூகமா?

""சமூகத்தின்மீதான காதல்.''

தலைநரைக்கும் வயதிலும் உங்கள் எழுத்து இளமையாக இருக்க என்ன காரணம்?

""இதயம் எப்போதும் இளமை யாகவே இருக்கிறது. ஒரு முடி நரைக் கும்போது உள்ளுக்குள் புதிய பூக்கள் ஏராளமாய்ப் பூக்கின்றன. அவை முடிசூடிக் கொள்வதால் நாம் அகதி ஆவதில்லை. நம் எழுத்துக்கு அகவை யும் ஆவதில்லை.''

மரபில் உங்கள் மனம்கவர்ந்த கவிஞர்கள் யார்? பட்டியலிட்டுப் பதமாகச் சொல்லுங்கள்...

""நான் வாழும் காலத்தில் என்னோடு வாழ்ந்த, வாழ்கின்ற கவியரசர் கள் மீரா, ரகுமான், பாலா, சிற்பி, இன்குலாப், சேலம் தமிழ்நாடன் இன்னும் பலர். பட்டியல் கொடுக்க நான் விரும்பவில்லை.''

தித்திப்புத் திரையுலகில் திருக்கவியே
நீங்கள் நுழைந்த தருணத்தை விரிவாகச் சொல்லுங்கள்...

""தற்செயலாய் நேர்ந்ததுதான் என்னுடைய திரைப்பயணம். என்னோடு தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுடைய தந்தை, தென்தமிழ்நாட்டு நாடக உலகில் புகழ்பெற்ற உடையப்பா ஆவார். "அனிச்சமலர்' என்று அவர் ஒரு படம் எடுத்தார். படிக்கும்போதே அவர் என் பாட்டுப் பணிகளை அறிந்தவர். ஆதலால் அவருடைய படத்தில் முதல் பாடலையே நான்தான் எழுதவேண்டும் என்று அழைத்தார். ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வாசலில் நின்று வரவேற்று என்னை அழைத்துச் சென்றார்.

இசையமைப்பாளர்களான சங்கர்- கணேஷ் இருவரிட மும் இவர்தான் எங்கள் கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பாடலை எழுதியதற்குப் பிறகு திரைப்பட உலகை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் என்னிடம், "கலைஞானி கமல்ஹாசன் அடிக்கடி உங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரைச் சந்தித்தால் புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்' என அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். திரையுலகைப் பற்றி பெரிதாக கனவொன்றும் எனக்கு இல்லாததால் அவருடைய அழைப்பினை நான் ஏற்காதிருந்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் நீங்கள் திரைப்படங்களில் எழுதவில்லை என்று என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வேறுவழியில்லை; நானும் சினிமாவில் பாடல்கள் எழுதியாகவேண்டும். இல்லா விட்டால் அவர்கள் ஏற்கெனவே எனக் குக் கொடுத்திருக்கும் "கவிஞர்' என்ற பட்டத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. எனவே கமலைச் சந்திக்க சம்மதம் சொன்னேன்.

பாலகுமாரன் மூலம் சந்திப்பு நிகழ்ந்த போது கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார். "உங்கள் இலக்கியத் தமிழை நான் மதிக்கிறேன். ஆனால், திரைப் படவுலகம் பெரும் வல்லமை மிக்கது. ஒரு படைப்பாளி அந்த ஊடகத்தையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் கவிதை லட்சம்பேரைச் சென்றடையும் என்றால், நீங்கள் எழுதும் திரைப்பாடல் கோடிக்கணக்கானவர்களை உடனடியாக ஓடிப்போய்த் தொட்டுவிடும்' என்று உபதேசித்து என்னை இயக்குனர் மனோபாலாவிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.

இயக்குனர் மனோபாலா அப்போது "ஆகாயகங்கை' என்ற திரைப்படத்தைத் தொடங்கியிருந்தார். அவர் என்னை பிரசாத் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று இசைஞானி இளையராஜாவின் முன்பு உட்கார வைத்து இவர்தான்

மு. மேத்தா என்றார். படித்திருக்கிறேன் என்று புன்னகைத்த இளையராஜா, பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான படங்களில் எழுதினேன்.''

நீங்கள் எழுதிய திரையிசைப் பாடல்களில்
உங்களைக் கவர்ந்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?

""உங்கள் குழந்தைகளில் உங்களுக்குப் பிடித்த குழந்தை எது என்று கேட்பதைப் போன்ற கடினமான கேள்வி இது. சில பாடல்களை வேண்டுமானால் நினைவுபடுத்தலாம். இசை ஞானி இளையராஜா இசையில் ரஜினி நடிக்க, பாலசந்தர் தயாரித்த "வேலைக்காரன்' படத்தின் ஒவ்வொரு பாடலும் என் உள்ளத்தில் ஈரமாய் ஒலிக்கிறது. "இரட்டைவால் குருவி' படத்தில் பாலுமகேந்திராவின் பார்வையில் "ராஜராஜ சோழன் நான்' என்ற பாடல் என் இதயத்தைத் தாலாட்டுகிறது. "சூரியவம்சம்' படத்தில் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனக்குள் அருவியாய் விழுகிறது. "பாடுநிலாவே' என்று என்னுள் "உதய கீதம்' கேட்கிறது. "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?' என "இதயக் கோயில்' என்னுள் எட்டிப் பார்க்கிறது.

"என் மனவானில் சிறகைவிரிக்கும் வண்ணப் பறவைகளே' என்று "காசி' யின் குரல் இதயத்தைத் தித்திப்பாய் தீண்டுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு' என்ற படத்தின் பாடல்கள், எங்களையும் சொல்லக்கூடாதா என்று ஏக்கத்தோடு கேட்கின்றன. வரிசைப்படுத்த முடியவில்லை. நான் எழுதிய பாடல்கள் எல்லாமே என் இதயத்தில் ஏறி, ரங்கராட்டினம் சுற்றுகின்றன.''

எதைநோக்கி உங்கள் இலக்கியப் பயணம்?
அதை எமக்கின்று அறிவிப்பீரா?

""என்னை நோக்குகிறவர்களை நோக்கி.''

இன்றைய இலக்கிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது எதுவோ?

""எழுது எழுது எழுது என்று உங்கள் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதுங்கள். எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங் கள். உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாமன்னன் ராஜராஜசோழனின் முகம் எந்த புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா இப்போது? எந்தப் புகழும் நிலையானதல்ல. இதை மனதில் நிறுத்துங்கள்.''

பிறப்பெனப்படுவது?

""சிறப்புகள் அடைவது.''

வாழ்வெனப்படுவது?

""வறுமையை வெல்வது.''

இறப்பெனப்படுவது?

""இனியதில் இனியது.''


நன்றி நக்கீரன்
சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்



1 கருத்து: