7 ஆக., 2012

புதிய அரசியல் கட்சி துவக்கினார் கேசுபாய்



ஆமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளரும், பா.ஜ., கட்சியில் இருந்து சமீபத்தில் விலகியவருமான கேசுபாய் படேல், "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கினார். குஜராத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குஜராத் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த கேசுபாய் படேல், நரேந்திர மோடி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீபத்தில் கட்சியில் இருந்து விலகினார். தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, புதிய அரசியல் கட்சியை நேற்று துவக்கினார். அந்தக் கட்சிக்கு, "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என, பெயரிடப்பட்டுள்ளது. புதிய கட்சி துவக்கியது தொடர்பான அறிவிப்பை காந்திநகரில் உள்ள தன் வீட்டில் வெளியிட்ட கேசுபாய் படேல், "வரும் சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., கட்சியை தோற்கடிப்பதே, கட்சியின் முக்கிய லட்சியம்' என்றார்.

புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை, கேசுபாய் படேல் வெளியிட்ட போது, அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் காசிராம் ராணா, முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பாஸ்கர்ராவ் டேம்லெஜி உட்பட பலர் உடனிருந்தனர். மேலும், குஜராத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடிக்கு எதிரான, முதல்வர் வேட்பாளராக, இவரை களமிறக்க, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத்தில் கணிசமாக வசிக்கும் படேல் சமூகத்தினரின் செல்வாக்கு பெற்றவர் என்பதாலும், பா.ஜ.,வில் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இருப்பதாலும், படேலை முன்னிறுத்தினால், நரேந்திர மோடியை தோல்வி அடையச் செய்து விடலாம் என, அவர்கள் நினைக்கின்றனர். ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கேசுபாய் படேலை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக