புதுடில்லி: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில், தனித்துப் போட்டியிட திரிணமுல் காங்., திட்டமிட்டுள்ளது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான, திரிணமுல் காங்., கடந்த 2009ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதுபோல், 2010ல் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் இந்நிலை தொடர்ந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு.கூ., வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு, மம்தா பானர்ஜி தன் ஆதரவைத் தர காலம் தாழ்த்தியது, காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், வரும் 2014ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என, திரிணமுல் காங்., கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சித் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், டில்லியில், நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும், திரிணமுல் காங்., தனித்துப் போட்டியிடும். எல்லா தொகுதிகளிலும் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம். பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் நேர்மையாளராகவும், வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இத்தகைய குணநலன்களைக் கொண்டவராக எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திகழ்கிறார். இவ்வாறு சுதீப் கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலையொட்டி, காங்., தலைவர் சோனியா நேற்று அளித்த மதிய விருந்தில், திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், வரும் லோக்சபா தேர்தலில், காங்.,குடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என, திரிணமுல் காங்., கூறியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக