சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் மெமோரியல் ஹால் அருகே இன்று (01.08.2012) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின்,
சென்னை மாநகராட்சிக்கு தலைமை ஏற்பது ஒரு மேயர். அந்த மேயருடைய அலட்சியப் போக்கை கண்டித்து நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மேயராக இருந்த நான் தலைமை தாங்கினேன். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பியவர் மா.சுப்பிரமணியன் அவரும் முன்னாள் மேயர்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலேயே இன்று இருக்கிறார் என்று இங்கு முழக்கங்கள் இருந்தது. ஏறத்தாழ ஒரு மாதத்தையும் தாண்டி அவர் கொடநாட்டில் இருக்கிறார். ஒரு முதல் அமைச்சர் இப்படி இருக்கலாமா என்று நாம் விமர்சிக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் இன்றைக்கு என்னத் தோன்றுகிறது என்று கேட்டால், சென்னையில் இப்படியொரு காலரா நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. எனவே சென்னையைவிட்டு நாம் அங்கே போய் இருக்கலாம் என்று அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால்தான் இடையிலே ஒரே ஒரு நாள் வந்தவிட்டு உடனடியாக ஓடியிருக்கிறார். இப்போதும் கூட இன்னும் ஒருமுறை வர இருக்கிறார். ஆகஸ்ட் 15ல் கொடியேற்றுவதற்காக வரப்போகிறார். ஆகவே ஏற்கனவே ஒருமுறை வந்துவிட்டு போனதற்கு பத்திரிகையில் செய்தி போட்டார்கள். முதல் அமைச்சர் கொடநாடு திரும்பினார். அடுத்து ஆகஸ்ட் 15 வந்துவிட்டு திரும்புகிறபோது, மீண்டும் கொடநாடு திரும்பினார் என்று செய்தி வரப்போகிறது. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் நம்முடைய ஆர்ப்பாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்னை மாநகராட்சியை காப்பாற்ற வேண்டும். மாநகராட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை காப்பற்ற வேண்டும். நோய், நொடிகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். எனவே மாநகராட்சி தனது பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று வலியுறுத்தக் கூடிய வகையிலே, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்தியாவிலேயே 4 பெரிய மாநகராட்சிகள் உண்டு. டெல்லி-, மும்பை, கொல்கத்தா, சென்னை. இந்த 4 மாநகராட்சிகளில் சென்னை அடங்கியிருக்கிறது. தமிழகத்தின் தலைநகராமாக இருப்பது சென்னை. இந்த சென்னையில் இப்படிப்பட்ட ஒருநிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி, நாம் மிகுந்த அவமானத்திற்கு, அவலநிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம்.
கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகள் என்ன. வாந்தி பேதி, மருத்துவமனைகளில் மக்கள் அனுமதி, காலராவிலே சிலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள், காலரா தாக்கப்பட்ட காரணத்தினால் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அந்த செய்திகள் தொடர்ந்து பத்திரிகைகளில் வந்துகொண்டிருக்கிறது.
இந்த செய்திகளை பார்த்தாவது மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், மாநகராட்சிக்கு தலைமை பொறுப்பேற்றிருக்கக்கூடிய மேயர், அந்த மாநகராட்சியை வழிநடத்தக்கூடிய அரசாங்கம் நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டிருக்க வேண்டும். எந்த ஒரு பணியிலும் அவர்கள் ஈடுபட்டதாக தெரியவில்லை.
என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் இருந்து பல புகார்கள் வந்தன. அதில் குறிப்பாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. ஏறக்குறைய 70, 75 சதவீத கொளத்தூரில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்கள்.
கழிவுநீர் குடிநீரில் கலக்கப்படவில்லை. நோய்க்கு மக்கள் ஆளாக்கப்படவில்லை என்று ஒரு பக்கம் மேயர் அறிக்கை விடுகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒரு அறிக்கை விடுகிறார். இதனால் மக்கள் என்னிடம் தருகிற புகார்கள் உண்மைதானா என்று கொளத்தூரில் நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அப்போது மக்கள் பாட்டிலில் அடைத்து வைத்திருந்த குடிநீரை என்னிடம் காட்டினார்கள்.
இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தந்தீர்களா என்று கேட்டேன். எவ்வளவோ புகார் தந்தோம். பத்திரிகையில் தொலைபேசி எண்களையெல்லாம் போட்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் தெலைபேசியில் தொடர்புகொண்டால் யாரும் எங்களுக்கு பதில் தருவதில்லை. சில நேரங்களில் தொலைபேசியை யாரும் எடுப்பதில்லை என்று வேதனையோடு சொன்னார்கள்.
இதையெல்லாம் தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் புகார் அனுப்பி வைத்தேன். நான் கொளத்தூரில் ஆய்வு செய்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கொளத்தூர் தொகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த அக்கறை, இந்த புத்தி நான் போகுவதற்கு முன்பு ஏன் வரவில்லை. பொதுமக்கள் புகார் தந்ததும் வவராதது ஏன். இதுதான் நான் கேட்கிற கேள்வி.
சட்டமன்றமா நடக்கிறது. பஜனை மடமாகத்தான் இருக்கிறது
பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கக்கூடியவர் ஒரு அறிக்கை தருகிறார். சென்னையில் காலரா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு ஒரு செய்தியை பரப்பி வருகிறார். யாரும் நம்ப வேண்டாம். சட்டமன்றத்திற்கு வராதவர். சட்டமன்றத்தில் பேசாதவர் என்றெல்லாம் பேசியிருக்கிறார். நீ சட்டமன்றத்தை ஒழுங்காக நடத்தினால் நாங்கள் வரமாட்டமோ. சட்டமன்றத்தில் பேசுவதற்குக் கூட அனுமதி கிடையாது. அங்கு சட்டமன்றமா நடக்கிறது. பஜனை மடமாகத்தான் இருக்கிறது. ஒரு பொறுப்பான பதில் சொல்ல வேண்டிய அமைச்சர் மக்கள் பிரச்சனையை பற்றி சிந்திக்காமல், ஒரு அரசியல் நோக்கத்தோடு திரித்து அறிக்கை வெளியிடுகிறார் என்றால், நாங்கள் என்ன இல்லாத பிரச்சனையை கையில் எடுக்கிறோமா.
புள்ளி விபரத்தை ஆதாரத்தோடு சொல்கிறேன். (காலரா நோய் பற்றி பத்திகையில் வந்த செய்திகளை படித்தார்.)
மாநகரக தந்தை என்பது, சென்னை மாநகராட்சியின் முதல் குடிமகன். வணக்கத்திற்குரிய மேயர் என்று சொல்வார்கள். நான் வணங்கக்கூடிய மேயராக இருப்பேன் என்று சொன்னேன். தெருதெருவாக வரவில்லையா. குறைகளை கேட்கவில்லையா. சரிசெய்யவில்லையா. குடிநீர் பிரச்சனையா, இது மாநகராட்சிக்கு சம்மந்தம் இல்லை என்று நான் என்றைக்காவது சொன்னது உண்டா. என்னைத்தொடர்ந்து மா.சுப்பிரமணியம் சென்னை மேயராக இருந்தாரே. நான் பலமேடைகளில் சொன்னதுண்டு, நான் அலைந்ததைவிட பல மடங்கு அலைந்தவர் மா.சுப்பிரமணியன் அவர்கள். யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், அதற்கு மதிப்பளித்து சரியான பதிலை தருவார். சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பிரச்சனைகளை கவனிக்கவில்லையா.
மாநகராட்சியில் பிரச்சனைகள், குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்
மாநகராட்சியில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். நான் இல்லை என்று சொல்லவில்லை. அதனை கலைவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அதற்குத்தான் பொறுப்பில் இருக்கிறீர்கள். அந்த பொறுப்பில் இருக்கிறவர்கள் பொறுப்பை உணராமல் இருக்கிறார்கள்.
சவால் விடுகிறீர்களே, நிரூபிக்க முடியுமா என்று கேட்கிறீர்களே, நிரூபிக்க முடியாவிட்டால் தண்டனையை ஏற்க முடியுமா என்று கேட்கிறீர்களே. நான் பதில் சவால் விட்டு என்னுடைய தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.
மக்கள் பிரச்சனை என்பதால்தான் இதனை கேட்கிறோம். நான் மிகவும் அடக்கத்தோடு கேட்கிறேன். பொறுமையுடன் கேட்கிறேன். அமைதியாக கேட்கிறேன். நிதானமாக கேட்கிறேன். என்னவென்று கேட்டால், நீங்கள் சவால்விட்டீர்களே அதனை ஏற்றுக்கொள்கிறோம். இதே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய அனைவரின் சாட்சியாக ஏற்றுக்கொள்கிறோம். உள்ளாட்சித் துறை அமைச்சரைப் பார்த்து கேட்கிறேன், மேயரைப் பார்த்து கேட்கிறேன், நாளைக்கு ஒரு குழு போடுங்கள், அனைத்துக் கட்சிக் குழு என்று ஒவ்வொரு கட்சியில் இருந்து பிரதிநிதிகளை நியமித்து அழையுங்கள். ஒவ்வொரு பத்திரிகையில் இருந்து ஒரு பிரதிநிதியை கூப்பிடுங்கள்.
காலரா இல்லை என்று சொல்கிறீர்கள். காலரா இல்லை என்று அந்த குழுவை அழைத்துக்கொண்டு சென்று காட்டுங்கள்.
வியாதி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம். நாங்களும் அழைத்துக்கொண்டு போகிறோம். நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால், நாங்கள் அமைக்கிறோம். அழைக்கிறோம் வருவீர்களா? இதனை போட்டியாக நான் கேட்கவில்லை. மக்கள் பிரச்சனை தீரவேண்டும் என்பதைதான் வலியுறுத்துகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக