2 ஆக., 2012

ஆடிப்பெருக்கு விழா...


ஆடிப்பெருக்கின் போது கரை புரண்டோடும் காவிரி ஆறு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்வெளியாகக் காட்சியளிப்பது, காவிரி கரையோர மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. காவிரி மட்டுமல்லாமல், தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்று, மக்கள் வழக்கமான கோலாகலத்துடன் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கர்நாடகாவின் குடகுமலையில், "ஆடு தாண்டும்' அளவுக்கே உள்ள சிறிய இடத்தில் இருந்து உருவாகும் காவிரி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் மழை நீர், பல்வேறு கிளை ஆறுகளின் உபயத்தால் பிரவாகமாக உருவெடுக்கிறது.
மரபு: "காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து (வாலிபமடைந்து), சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை வணங்குவர். ஆடிப்பெருக்கு விழா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் வைபவம் வெகு பிரசித்திப் பெற்றது.
செயற்கை காவிரி: தற்போது தண்ணீர் வற்றி மணல்வெளியாக காவிரி ஆறு காட்சியளிப்பதால், ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி, "போர்வெல்' மூலம் தொடர்ந்து தண்ணீர் விட, திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. "செயற்கை' காவிரிக் கரைகளில் பெண்கள் தங்களது சம்பிரதாய சடங்குகளை செய்து கொள்ளலாம். வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் திருவையாற்றில்,


ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். சோழர்கள் காலத்தில் இருந்தே ஆடிப்பெருக்கு விழா, தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசர்கள் காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகச்சிறப்பாக நடந்ததாக சரித்திரக் குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஆடிப்பெருக்கு நாளில், "காவிரி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்தை திருவையாற்றில் நடத்துவது மரபாக வைத்திருந்தனர். இத்தகைய சிறப்புமிக்க விழா, திருவையாற்றில், "போர்வெல்' மூலம் கொண்டாடப்படுகிறது. ஆற்றில் பொட்டுத்தண்ணீர் கூட இல்லாததால், வீடுகளில் உள்ள கிணறுகள், அடி பைப்புகள், குழாய்களில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாட இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றுக்குள் ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பூம்புகார் வழியாக காவிரி, கடலில் கலக்கிறது. ஆடிப்பெருக்கின்போது தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்த்து, மக்கள் கண்ணீரில் கரைகின்றனர். இதே நிலை தான், தமிழகம் முழுவதும் எல்லா ஆறுகளிலும் உள்ளது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தவிப்பு: உடுமலை திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிப் பட்டம் சிறக்க ஆண்டுதோறும்,

இப்பகுதி விவசாயிகள், இங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகள், பாலாறாக மாறி திருமூர்த்தி அணைக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது. இந்த ஆற்றில், ஆடிப்பட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விதைகளை வைத்து, ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜை நடத்துவர். இது போல், புதுமணத் தம்பதியினரும், தாலிக்கயிற்றை இந்த ஆற்றங்கரையில் மாற்றி, பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மலையிலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணைக்கு வரும் பாலாறு உட்பட ஆறுகள் முற்றிலுமாக வறண்டுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் பக்தர்கள், ஆடிப் பெருக்கையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக