சேலம்: "ஜூலை மாதத்தில் இருந்து, மின் தடை இருக்காது' என, தமிழக அரசு அறிவித்தபோதும், நகர் பகுதிகளில், ஐந்து மணி நேரமும், கிராமப் பகுதிகளில், எட்டு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. மின்தடையில் இருந்து தப்பித்தோம் என, நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள், மீண்டும் விரக்திக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், தொடர் மின் தடை இருந்து வந்தது. அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும், மின்தடைக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில், ஆட்சி மாற்றத்துக்கு மின் தடையும் ஒரு காரணமாக அமைந்தது. புதியதாக பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அரசு, மின் தடையைப் போக்கும் என, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், 10 மணி நேரம் என்றளவில் மின்தடை நீடித்ததால், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. எப்போதும் இல்லாத அளவில், எட்டு மாதமாக பொதுமக்களை வாட்டியெடுத்தது. காற்றாலை மின்சாரம் குறைந்ததே, மின் தடைக்கு காரணம் என, கூறப்பட்டு வந்தது. அக்னி நட்சத்திர காலத்திலும், மின் தடையை சகித்துக் கொண்டு நாட்களை மக்கள் கடத்தினர். சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்ததால், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து தவிப்புக்குள்ளாகினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, "ஜூலை மாதம் முதல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்' என, அறிவித்தார். நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மேட்டூர், எண்ணூர், தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் விநியோகம் மேலும் மோசமடைந்தது. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு உரிய மின்சாரம் வழங்கப்படுவதில்லை என, முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வந்தார். ஆனால், மவுனத்தையே பதிலாக மத்திய அரசு கொடுத்தது. சில நாட்களுக்கு முன், காற்றாலை மூலம், அதிகபட்சமாக, 3,000 மெகாவாட் அளவில் மின் உற்பத்தி கிடைத்தது. இதனால், எந்தவித தடையுமின்றி, வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு, மீண்டும் இடியாக வந்துள்ளது, ஐந்து மணி நேர மின் தடை. தற்போது, பகல், இரவு வேளைகளில், அனைத்து மாவட்டத்திலும், ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. காலை, 6 மணி முதல் 7 மணி வரையிலும், மதியம், 12 மணி முதல் 2 மணி வரையிலும், இரவு, 7 மணி முதல் 8 மணி வரையிலும், இரவு, 10 மணி முதல் 11 மணி வரையிலும், அவ்வப்போது நள்ளிரவிலும், மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு மின்வாரிய தலைமைப் பொறியாளர் ஜெயபால் கூறுகையில், மத்திய தொகுப்பில் இருந்து, 2,800 மெகாவாட் மின்சாரம் வந்து கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசம், டில்லி உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு நாட்களுக்கு முன், கடுமையான மின்பாதிப்பு ஏற்பட்டது. அந்த பிரச்னையால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மின்சாரத்தின் அளவு, 400 மெகாவாட் வரை குறைந்து விட்டது. அதேபோல், 10 ஆயிரத்து, 500 மெகாவாட் மின்சாரம் தேவை என்றிருந்த நிலையில், 11 ஆயிரத்து, 700 மெகாவாட் மின்சாரம் தேவையாக உயர்ந்துள்ளது. காற்றாலை உற்பத்தி, கூடுவதும், குறைவதுமாக உள்ளது. காலையில், 2,000 மெகாவாட்டாக இருப்பது, மாலை 3,000 மெகாவாட்டாக உயருகிறது. இரவில், படிப்படியாக, 1,500 மெகாவாட்டாக குறைந்து விடுகிறது. இவற்றையெல்லாம் சமாளிப்பதற்காக மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில், இப்பிரச்னை சரியாகிவிடும் என, எதிர்பார்க்கிறோம். அதன்பின், எப்போதும் போல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக