1 ஆக., 2012

இதுவும் சிகிச்சைதான்' என மாணவியை கற்பழித்த டாக்டர்

 

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் "டைபாய்டு' இருப்பது தெரிந்தது. தொடர்ந்து "குளுகோஸ்' ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். "வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்' என "சில்மிஷத்தில்' ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். "இதை வெளியே சொல்ல வேண்டாம்' எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையறிந்த டாக்டர், மாணவியிடம் "இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்' என சமாதானப்படுத்தி, "வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்' என காலில் விழுந்தார். இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக "உடைத்து' வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறுகையில், ""மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் "சில்மிஷத்தில்' ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,'' என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.

"ஏ' வகுப்பு கேட்ட டாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை "ரிமாண்ட்' செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் "ஏ' வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது.

மின் திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக