22 ஜூலை, 2012

ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு பி.ஜே.குரியன் பெயர் பரிசீலனை


புதுடில்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு பி.ஜே.குரியனை தேர்வு செய்வது குறித்து, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது. ஆனால், ஐ.மு.கூட்டணி அரசில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவரான தாரிக் அன்வரை, அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது. ராஜ்யசபா துணை தலைவராக இருந்த ரகுமான் கானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அந்தப் பதவிக்கு புதியவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின், துணைத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்தப் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த காங்கிரஸ் தலைவர் பி.ஜே.குரியன் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இது குறித்த இறுதி முடிவு, துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரே எடுக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி வரும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவரான தாரிக் அன்வரை, ராஜ்யசபா துணைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என, விரும்புகிறது. காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்படும் பி.ஜே.குரியன், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக