திருச்செந்தூரில் மதிமுகவின் 19வது ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியபோது,
’’மதிமுக எந்தச் சலனமும் இல்லாமல் கொள்கை ரீதியாக பயணம் செய்து வருகிறது. நாணயம், தன்மானத்தை பறிகொடுத்து விட்டு ஜெயலலிதாவுடன் நாம் கை கோர்த்தோம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். 7 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தோம். தியாகம் செய்தது முழுவதும் நாங்கள். அதிகாரத்திற்கு சென்றவர்கள் அவர்கள்.
ஜெயலலிதாவுக்கு முதல்வர் பிச்சை போட்டவர் வைகோ. அதை அவர் மறந்துவிட்டார். கடந்த தேர்தலில் எங்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு கொல்லைப்புறத்தில் கூட்டணி பேசி 41 இடங்கள் ஒரு கட்சிக்கு கொடுத்தனர். அதன்பின்னரும் உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் இருக்கிறோம்.
தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. ஜூனில் மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் பாயும். விவசாயிகள் எல்லாம் ஏர் உழுது நாற்று நடும் காலம் இது. ஆனால் தஞ்சை உட்பட தமிழகமே வறண்டு கிடக்கிறது. ஆனால் ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுத்து வருகிறார். இது நியாயமா?
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. எந்த மந்திரிக்கும் அதிகாரம் கிடையாது. மாவட்ட செயலா ளர் முதல் அமைச்சர்கள் வரை அங்கன்வாடி பணியாளர்,சத்துணவு அமைப்பாளர்கள் பணிகளை வாங்கித் தருவதாக் கூறி பல லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தரமுடியவில்லை. இதை சரி பண்ணவில்லையென்றால் சறுக்கி விழுந்து விடுவீர்கள். மின்வெட்டால் கஷ்டப்பட்ட மக்கள் தற்போது மின்கட்டண உயர்வாலும் சிரமப்படுகின்றனர்.
பல போராட்டங்கள் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை கம்பீரமாக நிற்க வைத்தவர் வைகோ. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது வைகோ.
அதை நிறைவேற்றியது அதிமுக அரசு. எங்களது பிரசாரத்தால் வருங்காலத்தில் வைகோவை முதல்வராக்குவோம்’’என்று தெரிவித்தார்.
நன்றி நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக