6 ஜூலை, 2012

மாறுபட்ட படங்களை பஞ்சு அருணாசலம் தயாரித்தார்

பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல்   வெளியானது.
.   
ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்திலும், அவரை வைத்து முற்றிலும் மாறுபட்ட படங்களை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். இவற்றில் "ஆறிலிருந்து 60 வரை'' என்ற படம், 1979 செப்டம்பர் 14-ந்தேதி வெளிவந்தது. தன் சகோதரர்களுக்காக 6-லிருந்து 60 வரை உழைக்கும் கேரக்டரில் ரஜினிகாந்த் வாழ்ந்து காட்டினார்.

வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1982-ல் வெளிவந்த "எங்கேயோ கேட்ட குரல்'' புரட்சிகரமான கதை அம்சம் கொண்ட படம். இதில், முற்றிலும் வித்தியாசமான ரஜினிகாந்தை, ரசிகர்கள் கண்டனர். தொளதொள சட்டை அணிந்த கிராமத்து ஆளாக ரஜினிகாந்த் நடித்தார்.

ரஜினிகாந்தின் மனைவியான கதாநாயகி (அம்பிகா), திருமணமான பிறகு வேறொரு ஆளுடன் ஓடிப்போக திட்டமிடுவாள். பிறகு மனம் மாறி திரும்பி விடுவாள். விஷயம், ரஜினிகாந்த்துக்குத் தெரிந்து விடும். அவளை வேறு வீட்டில் குடி வைத்து ஆதரிப்பார். அவள் இறந்தபின், அவள் உடலை எடுத்துப்போக யாருமே முன்வரமாட்டார்கள்.

ரஜினிகாந்த் அவள் உடலை ஒரு கைவண்டியில் வைத்து இழுத்துச்சென்று தகனம் செய்வார். ரஜினிகாந்த் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல், மாறுபட்ட குணச்சித்திர வேடத்தில் அருமையாக நடித்தார். படமும் வெற்றிகரமாக ஓடியது. 


இதேபோல், "புவனா ஒரு கேள்விக்குறி''யும் பஞ்சு அருணாசலம் தயாரித்த மாறுபட்ட படம். அதில், பெண்களை ஏமாற்றிக் கெடுக்கும் ஆன்டி ஹீரோவாக சிவகுமாரையும், நல்லவனாக ரஜினிகாந்தையும் நடிக்க வைத்தார். சிவகுமார், ரஜினிகாந்த் இருவருக்குமே மாறுபட்ட வேடம். அதை சவாலாக ஏற்று இருவருமே நன்கு நடித்தனர்.

சிவகுமாரால் கெடுக்கப்பட்ட சுமித்ராவை ஏற்க ரஜினிகாந்த் முன்வருவார். அந்தக்கட்டம் உணர்ச்சி மயமாய் அமைந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் நடித்த அனைவரும் புகழ் பெற்றனர். "கல்யாணராமன்'' படத்தில், கமலஹாசனை புதுமையாக நடிக்க வைத்தார், பஞ்சு அருணாசலம். "எடுப்பான'' பல் வரிசையுடன் ஒரு கமலஹாசன். நல்ல தோற்றத்துடன் இன்னொரு கமலஹாசன். புதுமையான இரட்டை வேடத்தில் கமலஹாசன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனும் சில படங்களில் பஞ்சு அருணாசலம் பணியாற்றியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-

"சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா'', என்று குங்குமம் படத்தில் சிவாஜிக்காக ஒரு பாட்டு எழுதினேன். "கவரிமான்'' படத்தில் மறுபடியும் அவரோடு ஒர்க் பண்ணினேன். அது மிகப்பெரிய ஹிட் இல்லாவிட்டாலும் நூறு நாள் ஓடிய படம். கெட்டுப்போன மனைவியின் கணவனாக சிவாஜியை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. சிவாஜியை வைத்து நானும் சித்ரா லட்சுமணனும் எடுத்த "வாழ்க்கை'' சூப்பர்ஹிட். "அவன்தான் மனிதன்'' சிவாஜியின் 175-வது படம். ஜி.பாலசுப்பிரமணியன் எழுதிய கதை இது.

கன்னடத்தில் வெற்றி பெற்ற இவரது கதையே தமிழில் `அவன்தான் மனிதன்.' நான் வசனம் எழுதினேன். ஏ.சி.திரிலோகசந்தர் இயக்கினார். படத்தின் ரிசல்ட் உங்களுக்கு தெரியும். மக்களுக்கு ஒரு கொள்கை உண்டு. கஷ்டப்படும் ஒருத்தன் போராடியோ, திடீரென்றோ பெரிய பணக்காரன் ஆனா ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் உதார குணமுள்ள ஒரு கோடீஸ்வரன், மற்றவர்களுக்கு கொடுத்து கொடுத்தே கஷ்டத்துக்கு உள்ளானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றாலும், சிவாஜியின் நடிப்பு இந்தப் படத்திலும் சிறப்பாக இருந்தது.''

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த பரணி ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த பஞ்சு அருணாசலம், இன்னொரு சித்தப்பாவான கண்ணதாசன் நடத்தி வந்த 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் போனார். அந்த சூழ்நிலை அவருக்குப் பிடித்திருந்தது. இலக்கிய ஆர்வமும், கதை எழுதும் தாகமும் கொண்ட பஞ்சு அருணாசலம், கண்ணதாசனிடம் பணியாற்ற விரும்பினார்.

பஞ்சு அருணாசலத்தின் கையெழுத்து, குண்டு குண்டாக - அழகாக இருக்கும். கண்ணதாசன் நடந்தபடியே வெகு வேகமாக சொல்லும் கவிதை வரிகளை, அதே வேகத்தில் அழகாக எழுதுவார். எனவே, அவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார், கண்ணதாசன்.

அப்போது, கண்ணதாசன் அரசியலிலும் தீவிரமாக இருந்ததால், பல நாட்கள் பொதுக்கூட்டங்களில் பேச வெளிïர்களுக்குச் சென்று விடுவார். பஞ்சு அருணாசலத்துக்கு ஓய்வு கிடைக்கும். அப்போது, பட அதிபர்களிடம் கதை சொல்வார். சில கதைகள், படப்பிடிப்பு தொடங்கி சில ஆயிரம் அடிகளுடன் நின்று போயின.

இந்த சமயத்தில், திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கள் பஞ்சு அருணாசலத்தைத் தேடி வந்தன. 1962-ல் வெளியான 'சாரதா' படத்துக்கு அவர் எழுதிய 'மணமகளே மருமகளே வா வா' என்ற பாடல் பெரிய 'ஹிட்' ஆயிற்று. எனவே, கண்ணதாசனின் ஆசியுடன் தொடர்ந்து பாடல் எழுதலானார்.

பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள் கண்ணதாசன் பாணியில் நன்றாக இருந்ததால், அவரை தன் படங்களில் பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். விரும்பினார். தன்னை வந்து சந்திக்குமாறு, ஆள் மூலம் சொல்லி அனுப்பினார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் சரியான உறவு இல்லாமல் இருந்தது. இருவருக்கும் இடையே 'பனிப்போர்' நடந்து வந்தது. எனவே, எம்.ஜி.ஆரை பஞ்சு அருணாசலம் போய்ப் பார்க்கவில்லை.


இந்தக் காலக்கட்டத்தில், பட அதிபர் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்தியிடம் 'ஹலோ பார்ட்னர்' என்ற நகைச்சுவைக் கதையை பஞ்சு அருணாசலம் சொன்னார். கதை பிடித்துப்போகவே, அதைப் படமாக எடுத்தார், கிருஷ்ணமூர்த்தி. கதாநாயகனாக நாகேஷ் நடித்தார். படம் நடுத்தரமாக போயிற்று.

அடுத்து, சினிமாவுக்காக இவர் எழுதிய கதை 'கல்யாணமாம் கல்யாணம்.' இதையும் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்திதான் தயாரித்தார். நகைச்சுவைப் படமான இதில் கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், 'சோ' முதலானோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது. பிறகு 'எங்கம்மா சபதம்', 'மயங்குகிறாள் ஒரு மாது' என்று பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதினார்.

வெறும் காமெடி படங்களுக்கு மட்டும் கதை எழுதினால், 'பஞ்சு அருணாசலத்துக்கு காமெடிதான் எழுத வரும்' என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்று அவர் பயந்தார். எனவே, 'சீரியஸ்' படம் எடுக்க எண்ணினார்.

'பிலிமாலயா' ராமச்சந்திரனும், பஞ்சு அருணாசலமும் சேர்ந்து, 'உறவு சொல்ல ஒருவன்' என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை தயாரித்தார்கள். படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, 'மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை எழுதினார். 'பிளாக்மெயில்' செய்வதைப் பின்னணியாகக் கொண்ட மாறுபட்ட கதை. இந்தப் படமும் வெற்றி பெற்றது.

எஸ்.பி.டி. பிலிம்ஸ் எடுத்த 'அன்னக்கிளி' படம் 1976 மே 14-ந்தேதி வெளிவந்தது. பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, சிவகுமார் - சுஜாதா நடிக்க, தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்த இப்படம், மகத்தான வெற்றி பெற்று 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

இளையராஜா இசை அமைத்த முதல் படம் இது. அனைத்துப் பாடல்களும் 'சூப்பர்ஹிட்' ஆனதால் அவர் பெரும் புகழை பெற்றார். தமிழ்ப்பட உலகில் அவருடைய சீசன் தொடங்கியது.

இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பற்றி பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-

'கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்போது என் உதவியாளராக இருந்தார். புதியவர்களை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், 'இளையராஜா என்று ஒரு இளைஞர் இருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் துணை இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம்' என்று என்னிடம் கூறினார்.

ஜி.வெங்கடேஷ் அப்போது கன்னடப்பட உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். தமிழில் அவர் அதிகப்படங்கள் பண்ணவில்லை. அவரது இசைக்குழுவில் ராஜாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் திறமை பற்றி எனக்குத் தெரியாது.

தொடர்ந்து செல்வராஜ் என்னிடம், 'இளையராஜாவிடம் 15 அற்புதமான டியூன்கள் இருக்கின்றன. சரியான வாய்ப்பு அமைந்தால் இசையில் நிச்சயம் சாதிப்பார்' என்றார்.

இளையராஜாவை வரவழைத்தேன். இசைக் கருவிகள் எதுவும் எடுத்து வராமல் சும்மா வந்திருந்தார். 'நாளைக்கு இசைக் கருவிகள் எடுத்து வந்து உங்கள் டியூன்களை வாசித்துக் காட்டுங்கள்' என்றேன்.

இளையராஜாவோ, 'வேண்டுமானால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்' என்றார். 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே', 'மச்சானப் பார்த்தீங்களா', 'வாங்கோனா' ஆகிய பாடல்களை தாளம் போட்டு பாடிக்காட்டினார். இசைக்கேற்றபடி அவருக்குத் தோன்றிய வார்த்தைகளை பொருத்தமாக போட்டுக்கொண்டு பாடினார்.

அந்தப் பாடல்களில் நான் எதிர்பார்த்த 'மண்வாசனை' இருந்தது. 'இவர் பெரிசா வருவார்' என்று மனம் சொல்லியது. ஆர்.செல்வராஜ் அப்போது 'மருத்துவச்சி' என்ற பெயரில் ஒரு கதை எழுதி வைத்திருந்தார். முழுக்க கிராமியப்படம். அதில் சில புதிய சம்பவங்களை சேர்த்து உருவான படம்தான் 'அன்னக்கிளி.'

முழுக்க முழுக்க அவுட்டோரில் எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர் - நடிகைகள் மேக்கப் போடாமல் நடித்தனர்.படம் தயாராகி முடிந்ததும், ரிலீஸ் செய்ய ரொம்ப சிரமப்பட்டேன். ஏற்கனவே என் படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த வினியோகஸ்தர்கள் யாரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை.

புதிதாக வந்த வினியோகஸ்தர்கள்தான் வாங்கி திரையிட்டார்கள். படத்தின் ஆரம்ப ரிசல்ட் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஆனால் சில நாட்கள் ஆனதும், படம் பிரமாதமாக ஓடியது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசைதான்.

படத்தை வாங்காமல் விட்ட வினியோகஸ்தர்கள் பிறகு வருத்தப்பட்டார்கள். படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய 'ஜாக்பாட்'டாக இப்படம் அமைந்தது.'

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக