17 ஜூலை, 2012

எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை...

 

கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர், மது பான விற்பனையாளர்.

ஆடி மாதத்தில், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால், ஆடி மாதத்தில் ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, "டல்' அடிக்கும். எனவே இம்மாதத்தில், வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, ஆடித் தள்ளுபடி விற்பனையை, வர்த்தகர்கள் அறிமுகம் செய்தனர்.


ஜவுளி கடைகளில் துவக்கம்:ஆடித் தள்ளுபடி விற்பனை, முதலில் ஜவுளிக் கடைகளில் துவங்கியது. துணி வகைகளுக்கு, ஐந்து முதல், 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்து, வியாபாரத்தில் அதிரடியைப் புகுத்தி வருகின்றனர். ஆடி விற்பனையை, ஆனி மாதம் துவங்கி, ஆவணி மாதம் வரை நீட்டிக்கின்றனர்.திருமண சுப காரியங்கள் நடந்த வீடுகளில், ஆடி சீர் வரிசை வாங்குவோரை கவர்ந்திழுக்க, ஜவுளி, நகை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் தள்ளுபடி காற்று, புயலாக வீசுகிறது."ஆடித் தள்ளுபடி, இவற்றுக்கு மட்டும் தானா... "குடிமகன்'களுக்கு சரக்கு விலையில், எந்த தள்ளுபடியும் இல்லையா...' என்ற கேள்வி எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கோவையில் வினோதமாக, சரக்கு வகைகளுக்கும், தள்ளுபடி அறிவித்து, புதுமையைப் புகுத்தியுள்ளனர்.


கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.


குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.


வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.

நன்றி தினமலர்...
இல்சவம் இதுக்குமா ?ஏற்கனவே குடிமக்கள் குடிக்கு சொல்லவா வேண்டும் 
இப்பா இலவசம் என்றால் ஐயோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக