19 ஜூலை, 2012

"டிஸ்மிஸ்'உள்ளே வெளியே ஆட்டம் துவக்கம்...


See full size image
எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அடாவடியாக செயல்பட்டு வருவது குறித்து, எனது கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அடாவடிகளை திருத்திக் கொள்ளுங்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

புது மந்திரி:செங்கோட்டையனுக்கு பதிலாக, புதிய வருவாய் துறை அமைச்சராக, வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., இன்று, ராஜ் பவனில், காலை 8.30 மணிக்கு, மந்திரியாக பதவியேற்கிறார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைத் தொடர்ந்து, ஜெயலலிதா விடுத்துள்ள எச்சரிக்கையால், எம்.எல்.ஏ.,க்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். செங்கோட்டையனின் பதவி பறிப்பால், அமைச்சர்கள் மத்தியிலும் கிலி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, ஆட்டம் போடும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கொட்டம் அடங்கும் என எதிர்பார்க்கலாம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள் கூட்டம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதற்கு, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நடந்த இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.அப்போது, ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் நிலைப்பாட்டைக் கூறி, ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவுக்கு ஓட்டளிக்குமாறு, எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க் களை அவர் கேட்டுக் கொண்டார் என கூட்டத்தில் பங்கேற்ற

எம்.எல். ஏ.,க்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், அடாவடிகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. "கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மாநகராட்சியைக் கலைத்து விடுவேன்' என, எச்சரித்தேன். ஆனால், பலர், இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. இதேபோல், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், அடாவடியாக செயல்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும், என் பார்வைக்குவந்து கொண்டு தான் உள்ளது; எம்.எல்.ஏ.,க்கள், தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டேன்; கடும் நடவடிக்கை எடுப்பேன். கருணாநிதியைப் போல அனைத்தையும் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருந்து விடமாட்டேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எச்சரித்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

மந்திரிக்கு கல்தா:வெறும் எச்சரிக்கையோடு கூட்டத்தை நிறைவு செய்யாமல், "சீனியர்' அமைச்சர் என்ற நிலையில் இருந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக, "டிஸ்மிஸ்' செய்து ஜெ., உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்து வந்த தலைமை நிலையச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களில் துவங்கி, எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர்கள் வரையிலான செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையினர் முதல்வருக்கு தொடர்ந்து அறிக்கைகளை அளித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில், ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டி, கவுன்சிலர்களை, முதல்வர் எச்சரிக்கை செய்ததோடு, தவறு செய்யும் கவுன்சிலர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்தார். மேலும், ஜூலை மாதத்துக்குள்,

கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல், மாநகராட்சியைக் கலைத்து விட்டு, தனி அலுவலர் மூலம், மாநகராட்சியை நடத்தி விடுவேன் என, அவகாசமும் கொடுத்திருந்தார்.ஆனால், ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்குப் பின்னரும், கவுன்சிலர்கள் சிலர், அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், இதேபோல் நடந்து கொண்டிருப்பதும், முதல்வரின் பார்வைக்கு சென்றதால், கோபமடைந்த அவர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.வெறும் எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளாமல், செங்கோட்டையனை அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்ததன் மூலம், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு, முதல்வர் கிலியை ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த எச்சரிக்கைக்குப் பின், தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத எம்.எல்.ஏ.,க் கள் மீது, கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.-

நன்றி தினமலர் 

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் அக்காலத்தில். இப்போதும் கூட ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.

இனி இவரின் நடவைக்கை பொறுத்திருந்து பார்ப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக