6 ஜூலை, 2012

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் ’ஏ’ அறை திறப்பு: கோடிக்கணக்கில் தங்க, வைர நகைகள்


திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் ’ஏ’ அறை திறப்பு: கோடிக்கணக்கில் தங்க, வைர நகைகள் 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான பத்மநாப சாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலஸ்தானத்தின் கீழ் 6 ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரகசிய அறைகளுக்கு ஏ, பி, சி, டி, இ, எப் என பெயர்கள் சூட்டப்பட்டது. இந்த அறைகளில் மன்னர் காலத்து பொற்குவியல்கள், நகைகள், நவரத்தின கற்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11/2 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த அறைகளில் எவ்வளவு தங்கம் மற்றும் பொருட்கள் உள்ளது, அவற்றின் மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மதிப்பீடு செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவையும் கோர்ட் நியமித்தது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் இந்த அறைகளை திறந்து நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கியது. சி முதல் எப் வரை உள்ள அறைகளில் அந்த அரிய வகை பொக்கிஷங்களை அறிவியல் முறைப்படி, அதிநவீன உபகரணங்கள் உதவியுடன் துல்லியமாக மதிப்பிட்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் நியமித்த நிபுணர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் குழுவினர் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, டி என்ற ரகசிய அறையின் பொற்குவியல் பொருட்களின் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில், ஏ அறையை திறந்து, அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட நிபுணர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, பொற்குவியல் மதிப்பீட்டு பணிகளுக்காக ஏ அறை நேற்று காலை திறக்கப்பட்டது. திருவனந்தபுரம் மாவட்ட கோர்ட் நியமித்துள்ள வக்கீல் ஆணையாளர்கள் அந்த அறையை திறந்து மதிப்பீட்டு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

கோவிலில், ஸ்ரீபத்மநாப சாமி யோக நித்திரையில் உள்ள கருவறைக்கு வெளியே 'பரதகோண்' பகுதியில் பூமிக்கு அடியில் இந்த ஏ ரகசிய அறை அமைந்துள்ளது. இந்த அறைக்கு தரையில் இருந்து 2 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட பாதாள வழி மட்டுமே உள்ளது. ஆனால் படிகள் இல்லை. அதனால் ஒருவர் அந்த அறைக்குள் இறங்கிவிட்டால், பிறர் உதவியின்றி வெளியே வர இயலாது.

நீண்டகாலமாக திறக்கப்படாமல் இருந்த இந்த அறையில் விஷ வாயு இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக அந்த அறைக்குள் முதலில் சிலிண்டர் உதவியுடன் ஆக்சிஜன் வாயுவை செலுத்தினர். சுத்தமான காற்று இருப்பதை உறுதி செய்த பின்னரே, தீயணைப்பு படை ஊழியர்கள் அறைக்குள் இறங்கினர்.

பின்னர் அங்கிருந்து பொற்குவியல் பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு, மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு செல்லப்பட்டு மதிப்பீடு பணிகள் உடனடியாக தொடங்கின.

பொற்குவியல் பொருட்களின் தொன்மை, தூய்மை உள்ளிட்டவைகளை நிர்ணயிப்பதற்காக பெல்ஜியம், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நவீன உபகரணங்கள் பத்மநாபசாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டு பணிகளின் காட்சிகள் முழுவதும் வீடியோ மற்றும் முப்பரிமாண கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. தகவல்கள் இஸ்ரோ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வர் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த அறையில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட ஒரு ஆண்டு வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த ஏ அறையை திறந்து பார்த்தபோது அதில் தங்க கடவுள் சிலைகள், வைரம், மாணிக்க கற்கள், பொற்காசுகள் இருப்பது தெரியவந்தது. இதுவரை திறந்துள்ள 5 அறைகளில் ஏ அறையில் தான் கூடுதலான மதிப்புள்ள நகைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்துடன் இ மற்றும் எப் அறைகளின் மதிப்பீட்டு பணிகளும் நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 6 அறைகளில் பி அறை மட்டும் இதுவரை பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. அடுத்ததாக பி அறை திறக்கப்பட்டு நகை மதிப்பீடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆகஸ்டு 8-ந் தேதி நகை, பொற்குவியல் மதிப்புக்கான இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் நிபுணர் குழு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்ப்பதாக அக்குழுவை சேர்ந்த ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக