5 ஜூலை, 2012

அராபத் உடலை பரிசோதிக்க தயார்: பாலஸ்தீனம் அறிவிப்பு

 

ஜெருசலேம் : பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக, பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11ம்தேதி இவர் பாரிஸ் புறநகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். இவருடைய இறப்பில் பாலஸ்தீன தலைவர்கள் சந்தேகப்பட்டனர். கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, அராபத் இறக்கும் தறுவாயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான "பொலொனியம்' இருந்துள்ளது. ரஷ்ய உளவாளியான அலெக்சாண்டர் லிட்வினென்கோ என்பவர், லண்டன் ஓட்டலில் தேனீர் கோப்பையில் தடவப்பட்ட பொலொனியம் விஷத்தால் கொல்லப்பட்டார். இதே முறையில் தான் அராபத் உடலிலும் பொலோனியம் இருந்துள்ளது, என ஆய்வக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிருபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், என கோரும் உரிமை அராபத்தின் மனைவி சுகாவுக்கு மட்டுமே உள்ளது' என, சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்துள்ளார்.

யாசர் அராபத்தின் மனைவி சுகா பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், "அராபத் கொல்லப்பட்டுள்ளார் என்ற விஷயம், உலகுக்கு தெரிய வேண்டும். எனவே, அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்' என்றார். ஆனால், யாரையும் அவர் குற்றம்சாட்டவில்லை.

இதுகுறித்து, பாலஸ்தீன அதிபரின் தகவல் தொடர்பாளர் நபில் அபு தினே குறிப்பிடுகையில், "அராபத் மனைவி சுகாவின் கோரிக்கையை ஏற்று, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள, அராபத்தின் உடலை மீண்டும் வெளியே எடுத்து பரிசோதிக்க தயாராக உள்ளோம்' என்றார். ஆனால், எப்போது அவரது உடல் வெளியே எடுக்கப்படும் என்பதை, அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் மறுப்பு: அராபத்தின் எதிரியாக கருதியது, இஸ்ரேல் நாட்டை தான். எனவே, அந்த நாடு தான் அவரை கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. "அராபத், பாலஸ்தீனர்களிடம் தான் இருந்தார். எனவே, அவர் மரணத்தில் எங்களுக்கு தொடர்பில்லை' என, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
விடுதலை தலைவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்தை விட உல் நாட்டில் தான் ஆபத்து.,,அரபாத்துக்கு விஷம் காந்திக்கு துப்பாக்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக