18 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தலில் பண பேரம் நடக்கிறது: மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு


புதுடெல்லி, ஜூன். 18-
 ஜனாதிபதி தேர்தலில் பண பேரம் நடக்கிறது: மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் காங்கிஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை ஏற்க மறுத்துவிட்டது.
 
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை அடுத்த ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் முதலில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக இருந்தார்.
 
பிறகு திடீரென அவர் மம்தா பானர்ஜியை கழற்றி விட்டு விட்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டார். அவரது இந்த திடீர் பல்டி அரசியல் உலகில் பல்வேறு யூகங்களையும், பரபரப்பான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் அப்துல் கலாமுக்கு பேஸ்புக் இணையதளம் மூலம் ஆதரவு திரட்டி வரும் மம்தா பானர்ஜி, நேற்று பேஸ்புக் பக்கத்தில் புதிய பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் பெரிய அளவில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக மம்தா பானர்ஜி எழுதியுள்ள கட்டுரையில், கடந்த 2 நாட்களாக டெல்லியில் பல்வேறு ரகசிய பேரங்கள் நடந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பண பேரமும் நடந்து வருகிறது. ஜனநாயக அரசிலுக்கு இது உகந்தது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அந்த கட்டுரையில் மம்தா பானர்ஜி மக்களை போராடவும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:-
 
அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான மக்கள் இணைய தளத்தில் எழுதி இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் இந்த ஒருமித்த குரலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஜனாதிபதி தேர்தலில் நடக்கும் லஞ்ச பண பேரம், ரகசிய பேரங்களை எதிர்த்து போராட மக்கள் முன் வரவேண்டும்.
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டம். பொது மக்களின் விருப்பம், லஞ்சம், பண பேரம் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று அரசியலில் இறையாண்மை, கொள்கைகள் இல்லாமல் போய்விட்டது. இது நமது நாட்டின் நீண்ட பாரம்பரியத்தை அழிப்பதாக உள்ளது. இந்தியாவின் மரபு, ஒற்றுமை, ஜனநாயகத்தை காக்க வேண்டுமானால் ஜனாதிபதி தேர்தலில் நடக்கும் ஊழல் மற்றும் ரகசிய பேரங்களுக்கு எதிராக போராட மக்கள் முன் வர வேண்டும்.
 
இவ்வாறு பேஸ் புக் இணைய தளத்தில் மம்தா பானர்ஜி எழுதியுள்ளார்.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக