20 ஜூன், 2012

பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மரணம் :




பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மரணம் :
திரையுலகினர் அஞ்சலி

சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என பிரபலங்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர் கேஆர்ஜி( 73). இவர் இன்று (20.6.2012) காலை காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. தி.நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டில் கேஆர்ஜி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடக்கிறது.

ரஜினிகாந்த், கே.பாலசந்தர், ஆர்.சுந்தராஜன், இப்ராகிம் ராவுத்தர், பிரமிட் நடராஜன், கோவை தம்பி, பூர்ணிமா பாக்யராஜ், கமீலா நாசர், பி.எல். தேனப்பன், மோகன்நடராஜன், எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன், ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு உட்பட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத் தினர். தொடர்ந்து அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தனது 'கேஆர்ஜி இன்டர்நேஷனல் பிலிம் கார்ப்பரேஷன்' சார்பில், ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருப்பம், ரஜினி நடித்த ஜானி, கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், சரத்குமார் நடித்த செம்மலர், பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், விஜய் நடித்த மின்சாரக் கண்ணா, மம்முட்டி, மோகன்லால் நடித்த மலையாளப் படங்கள் என 65க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கேஆர்ஜி.

தயாரிப்பாளர் சங்கத்தில் 4 ஆண்டுகள் தலைவராகவும், பிலிம்சேம்பரில் 5 ஆண்டுகள் தலைவராகவும் இருந்தார். தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளை உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் கேஆர்ஜி. இயக்குநர் பாரதிராஜாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் கே.ஆர்.ஜி. அதனால்தான் இவரை எப்போதும் ‘முதலாளி’ என்று அழைத்து வந்தார் பாரதிராஜா.

மறைந்த கே.ஆர்.ஜி.யின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு‌க்கு ரஜினி, கவுண்டமனி, ஏவி.எம்.சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி எஸ்.தாணு உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது இறு‌தி‌ச் ச‌ட‌ங்கு இ‌ன்று மாலை செ‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌கிறது.

கே.ஆர்.ஜி.க்கு ஒரு மகன் கங்காதரன். அவர் காலமாகிவிட்டார். மகள் பெயர் ராதா. கவுதம், மாளவிகா என மகன் வழி பேரன் பேத்திகள் உள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக