28 ஜூன், 2012

திருமாவளவனுக்கு பிடிவாரண்டு....

 

கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு

கொலை முயற்சி, பஸ் கொளுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 4 பேருக்கு பிடி வாரண்டை பிறப்பித்து விழுப்புரம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

கடந்த
1-6-2008-ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக்கழக பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் வழியில் திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கினர். அப்போது சுமார் 20 பேர் பஸ்சின் முன் பக்க, பின் பக்க படிக்கட்டு வழியாக ஏறினர்.
விழுப்புரம்-புதுச்சேரி ரோட்டில் எல்.ஆர். பாளையம் அருகில் பஸ் வரும்போது பஸ்சில் ஏறிய திருபுவனையை சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமாஇளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் பஸ் டிரைவர் மோகனை தாக்கி பஸ்சை நிறுத்தக்கூறினர்.
பின்னர் படிக்கட்டுகளில் வழியை விடாமல் நமது சமுதாயத்தை சேர்ந்தவரை கடலூர் மாவட்டத்தில் வெட்டிக்கொலை செய்து விட்டார்கள். அதனால் நமது தலைவர் திருமாவளவன் கூறியதுபோல் பஸ்சில் உள்ளவர்களை அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யுங்கள், பஸ்சை கொளுத்துங்கள் என்று கூறினார்கள்.

இதை தடுக்க முயன்ற பஸ் கண்டக்டர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். டிரைவர் மோகனை தடியால் தாக்கினர். மேலும் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500-ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2ல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக