28 ஜூன், 2012

புரட்சிகர மாணவர்கள் 100 பேர் கைது-

பள்ளி கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை: புரட்சிகர மாணவர்கள்
 100 பேர் கைது- போலீசாருடன் மோதல்-கைகலப்பு

சென்னை, ஜூன். 28-

அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வலியுறுத்தியும் இலவச கட்டாய கல்வி வழங்க கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். பகல் 11 மணி அளவில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்களும் பெண்களும் திடீரென ஊர்வலமாக புறப்பட்டு பள்ளி கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் கல்லூரி சாலையில் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசாருக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது அனைவரும் கை கோர்த்தபடி தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவர்களை வேனில் ஏற்ற சிரமம் ஏற்பட்டது.

ஒவ்வொருவரையும் குண்டு கட்டாக தூக்கி வேனுக்குள் ஏற்றினார்கள். முரண்டு பிடித்த வாலிபர்களை தரதரவென இழுத்து சென்று வேனில் கொண்டு சென்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்தது. வேனில் ஏற்றப்பட்ட வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் வேனுக்குள் அவர்கள் தாக்கப்பட்டனர்.

கைக்குழந்தையுடன் மறியலில் ஈடுபட்ட பெண்களையும் போலீசார் வேனில் ஏற்றினார்கள். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதானர்கள். வாலிபர்களையும் பெண்களையும் இழுத்துச் சென்றதால் ஆங்காங்கே செருப்புகள் சிதறிக் கிடந்தன. சுமார் 30 நிமிட நேரம் அந்த பகுதியே போர்க்களமாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக