8 ஜூன், 2012

மீதமுள்ள ஆண்டுகளை மக்களுக்கான ஆட்சியாக மாற்ற முடியும் என்றார்...விஜயகாந்த்





ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்தவர்கள் இடைத்தேர்தலை கண்டு பயப்படுவது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 


புதுக்கோட்டையில் தேமுதிக வேட்பாளர் ஜாகிர்உசேனை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், ஓராண்டில் நூறாண்டு சாதனை செய்தவர்கள் இடைத்தேர்தலை கண்டு பயப்படுவது ஏன்? ஓராண்டில் நூறாண்டு சாதனை விளம்பரத்துக்காக 500 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தால், தேமுதிக போட்டியிட்டிருக்காது. தன் முதுகைப் பார்த்துவிட்டு அடுத்தவர் முதுகை பார்க்க வேண்டும் என்று பழமொழி ஒன்று இருக்கு தமிழில். மத்திய அமைச்சர் ஒருவரை பதவி விலக வேண்டும் என்று சொல்லும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, தன் மீது உள்ள வழக்குகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.



இடைத்தேர்தல்களில் வாக்குக்கு பணம், பொருள் கொடுக்கும் கலாசாரம் தமிழகத்தில் இருப்பதால்தான் இங்கு ஆளும்கட்சி வெற்றிபெறுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. தன்னுடைய சாதனைகளை மக்கள் பணத்தில் எம்ஜிஆர் விளம்பரம் செய்ததில்லை.


சங்கரன்கோவிலில் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. ஆனால், புதுக்கோட்டையில் தேமுதிகவும், அதிமுகவும் மட்டுமே போட்டியிடுகின்றன. எனினும் 32 அமைச்சர்களை உள்ளடக்கிய 52 பேர் கொண்ட பணிக்குழு நூற்றுக்கணக்கான கார்களில் வலம் வந்து பிரசாரம் செய்கின்றனர்.




ரூ. 67 லட்சம் பறிமுதல் செய்ததை பெரிதாக பேசும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்காக போன மாதமே இந்தத் தொகுதிக்குள் கொண்டு வந்த பணத்தை என்ன செய்ய முடியும்?




மணல் கொள்ளையே நடக்கவில்லை என முதல் நாள் கூறும் முதல்வர், அடுத்த நாள் மணல் கொள்ளையில் ஈடுபட்டோரிடம் ரூ. 13 கோடி தண்டத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியதால், மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்கிறார்.




இந்தத் தொதியில் அதிமுக தோற்றாலும் ஆட்சியில் மாற்றம் வராது. ஆனால், மீதமுள்ள ஆண்டுகளை மக்களுக்கான ஆட்சியாக மாற்ற முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக