14 ஜூன், 2012

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல்கலாம் நிபந்தனை...



ஜனாதிபதி தேர்தலில் முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் ஒருமித்த கருத்துடன் அப்துல் கலாமை முன் நிறுத்தியுள்ளனர்.

முன்னதாக அவர்கள் இருவரும் அப்துல்கலாமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அப்துல்கலாம் 60 சதவீத ஓட்டுகள் கிடைத்தால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என்று தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்தே முலாயம்சிங் யாதவ், மம்தா பானர்ஜி இருவரும் அப்துல்கலாமை முன் நிறுத்தி ஆதரவு திரட்டும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குழப்பத்தால், பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகள் தற்போதைக்கு பொறுமையாக இருக்க முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படட்டும். அதன் பிறகு முடிவு எடுக்கலாம் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும், காங்கிரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளன. 
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தங்கள் வசம் இருந்து நழுவிச் செல்வதை உணர்ந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாற்று வழிகளில் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். பாரதீய ஜனதாவுடன் ஒரு மித்த கருத்தை உருவாக்கி, அவர்கள் உதவியுடன் ஜனாதிபதியை தேர்வு செய்யலாமா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரார் முயன்று வருகிறார்கள். 
பா.ஜ.க. தலைவர்களும் இதையே விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி பதவிக்கு உதவுவதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் உதவியுடன் துணை ஜனாதிபதி பதவியை எந்த சிக்கலும் இல்லாமல் பெற்று விடலாம் என்று பா.ஜ.க.வில் ஒரு சாரார் கருதுகிறார்கள். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ பேச்சு இதுவரை நடை பெறவில்லை.
காங்கிரசும் பா.ஜ.க.வும் கை கோர்த்து விடக்கூடாது என்பதற்காக நேற்று முலாயம்சிங், மம்தா பானர்ஜி இருவரும் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அப்துல் கலாமை ஆதரிக்கக் கோரி பாரதீய ஜனதாவுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதோடு பா.ஜ.க. கூட்டணியான தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சரத்யாதவை சந்தித்துப் பேச தூதுக் குழுவை அனுப்பினார்கள். அப்துல்கலாமை தேர்வு செய்வதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு நல்லது என்று சரத்யாதவிடம், முலாயம் சிங் யாதவ் தூதர்கள் விளக்கி கூறினார்கள். 
அவர்களிடம் சரத்யாதவ் கூறுகையில், காங்கிரஸ் முதலில் தனது வேட்பாளரை அறிவிக்கட்டும். அந்த கூட்டணியில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வரட்டும். மம்தாவும், முலாயம்சிங் யாதவும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறார்கள்.

கூட்டணி குழப்பம் முடிவுக்கு வந்ததும் நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறியதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி டெல்லியில் இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அப்துல்கலாம் ஏற்கனவே ஜனாதிபதி பதவி வகித்து விட்டார். அவர் மீண்டும் போட்டியிடுவது தேவையில்லாதது என்று கருதுவதாகவும் தெரிவித்தார். 
இதற்கிடையே அப்துல் கலாமை முலாயம்சிங் யாதவ், மம்தாபானர்ஜி இருவரும் முன் நிறுத்துவது பற்றி பாரதீய ஜனதா தலைவர்கள் நிதின்கட்காரி வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, அப்துல்கலாமை ஆதரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. 
சமாஜ்வாடி கட்சி அப்துல் கலாமை பரிந்துரைத்தால் ஆதரிக்க தயார் என்று கடந்த மாதம் பா.ஜ.க. தலைவர்கள் கூறியிருந்தனர். எனவே பாரதீய ஜனதாவும், அந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம் கட்சிகளும் அப்துல்கலாமை ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

மீண்டும் தமிழருக்கு இந்த் பதவி 
கிடைக்க வாய்ப்பு இருக்கா ?
பாராளுமன்ற தமிழர்களுக்கே வெளிச்சம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக