10 ஜூன், 2012

வெங்’காயம்’...

கமர்ஷியல் ஹீரோக்களின் மெகா பட்ஜெட் படங்கள், புது இயக்குனர்களால் உருவாகும் சிறந்த கதையம்சமும், கருத்தும் கொண்ட சிறிய பட்ஜெட் படங்களை தலைதூக்க விடுவதில்லை. அப்படி உருவானதே தெரியாமல் மறைக்கப்பட்ட படம் தான் வெங்’காயம்’. 


சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய வெங்காயம் படம் ரிலீஸான போது பெரிய ஹீரோக்களின் படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டதால் தியேட்டர் கிடைக்காமல் வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு இயக்குனர் சேரனின் முயற்சியால் மறுபடியும் ரிலீஸான வெங்’காயம்’ ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ரீரிலீஸான வெங்’காயம்’ படம் 75 நாட்களை கடந்துள்ளது. 


வெங்’காயம்’ படத்தின் இந்த வெற்றியை பற்றி பேசும் போது இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் “ ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று கூட தெரியாமல் இருந்த வெங்’காயம்’ இன்று 75 நாட்களை கடந்து வெற்றியடைந்துள்ளது. முக்கிய நகரங்களில் வெங்’காயம்’ படத்தை எடுத்துவிட்டு புதுப்படங்கள் திரையிடப்பட்டாலும் கிராமங்களில் வெங்’காயம்’ மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெங்’காயம்’ படத்தின் இந்த வெற்றியை பத்திரிக்கை நண்பர்களுக்கு மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். 


பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை நடைபயில அன்னையின் கைகளை பிடித்துக் கொண்டு நடக்க முயற்சிப்பது போல, ரிலீஸுக்கு தயாரானதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த வெங்’காயம்’ படத்தை ஒரு அன்னையாய் கைகளை பிடித்து அழைத்துச் சென்று நடக்க சொல்லிக்கொடுத்தது பத்திரிக்கை நண்பர்கள் தான். இன்று படம் நன்றாக ஓடவே துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் இயக்குனரான என் அரம்ப கால வாழ்க்கையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். 


இயக்குனராகும் ஆசையில் இங்கு வந்த நான் என் தந்தை உணவுக்காக அனுப்பும் பணத்தை புத்தகங்கள் வாங்கி படித்தும், திரைப்படங்கள் பார்த்தும் பட்டினியாகக் கிடந்தேன். பட்டினி கிடக்கும் கஷ்டத்தை அனுபவித்த நான், என்னால் முடிந்தவரை மற்றவர் பசியை தீர்க்க வேண்டும் என உறுதியாக இருக்கிறேன். வடபழனியில் ஒரு ஹோட்டல் துவங்கவிருக்கிறேன். ஒரு காபிக்கு கொடுக்கும் பணத்தில் ஒரு வேளை உணவு கிடைப்பது தான் மக்களுக்கு மகிழ்ச்சி. 


நான் துவங்கும் ஹோட்டல் லாபம் கொடுக்கவில்லையெனினும் ‘ ஒரு காபியின் விலையில் ஒரு வேளை உணவு’ என்ற வகையிலேயே இயங்கும். அண்ணன் சேரனுக்கும், மற்ற டெக்னீஷியன்களுக்கும் நன்றி சொல்ல நான் கடமைபட்டிருக்கிறேன். சேரன் அண்ணன் எனக்கு உதவிய வகையில் நான் மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்..


படம் சொன்ன பாடமாய் பசி தீர்க்கும் நிலையில் செய்த நன்றி இன்று....
வெங்காயம் வெறும் காயமாய் போகமால் ,நட்டத்தில் ஏறிப்போகாமல் காப்பாற்றிய பெருமை சேரனுக்கே...
சேரனுக்கு வாழ்த்து சொல்லுவோம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக