25 செப்., 2012

இ.கம்யூ எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் எம்எல்ஏ ராமச்சந்திரன். பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளரான பழனிச்சாமி கடந்த ஜுன் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராமச்சந்திரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்த ராமச்சந்திரன் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஓசூர், தளி போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்தி கற்களை வெட்டி கடத்தியதாக, இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் தொழிலதிபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே பழனிச்சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராமச்சந்திரனின் சகோதரர் வரதராஜன், மாமனார் லக்குமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமச்சந்திரன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.அசோக் குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமச்சந்திரனிடம் இதற்கான உத்தரவை காண்பிப்பதற்காக போலீசார் விரைந்தனர். 

அதிமுக ஆட்சி வந்தபிறகு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எம்எல்ஏ ஒருவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெ.வை சந்தித்த தா.பாண்டியன், ராமச்சந்திரன் விவகாரம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அதிமுக தோழமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது, இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்போது, தா.பாண்டியனை அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமாதானப்படுத்துவார் என்று கட்சியினர் தெரிவித்தனர்
நன்றி .
நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக