25 செப்., 2012

சென்னையில் மின்வெட்டை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 25-

தமிழகத்தில் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, கூட்டுறவு சங்க தேர்தலில் போலியாக உறுப்பினர்களை சேர்ப்பது, செயல்படாத நிலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து இருந்தது.

அதன்படி தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் சென்னையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி காலத்தில் தொழில்வளம் பெருகியது. அதற்காக மின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை தவிர மற்ற இடங்களில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை இருந்தது உண்மை. ஆனால் அதையே காரணம் காட்டி, தான் ஆட்சிக்கு வந்தால் தடையில்லாத மின்சாரம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இன்று வெளி மாவட்டங்களில் 10 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

சென்னையில் தற்போது 1 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. நாளை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்போவதாக கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டவில்லை. தி.மு.க. ஆட்சியில் போது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுடன் பேசி 1000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால் இப்போது கவுரவ பிரச்சினையாக கருதி வாங்க தயங்குகிறார்கள்.

சென்னைநகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலுக்காக அ.தி.மு.க.வினரையே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். இவற்றை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர் தனசேகரன், அன்புதுரை, வேலு, மகேஷ்குமார், மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ஜெ.கருணாநிதி, சேப்பாக்கம் சுரேஷ்குமார், உதயசூரி யன், கே.கே.நகர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பிரியதர்ஷினி எம்.ஜி. சுரேஷ்குமார், சேலம் சுஜாதா, தாயகம் கவி, வி.எஸ்.ராஜ், சுப.முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக