2 ஆக., 2012

இன்று ஆடிப்பெருக்கு விழா: திருச்சி காவிரிக்கரையில் குவிந்த புதுமண தம்பதிகள்

திருச்சி, ஆக. 2- இன்று ஆடிப்பெருக்கு விழா: திருச்சி காவிரிக்கரையில் குவிந்த புதுமண தம்பதிகள் 

விவசாயத்ததை பிரதான தொழிலாக கொண்ட காவிரி கரையோர மக்கள் வளங்களை வாரி வழங்கும் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழா நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக தமி ழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்தாலும், காவிரி ஆறு பாயும் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகத்துடன் நடைபெறுகிறது.

இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஏராளமானோர் குவிந்தனர். வழக்கமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் காவிரி ஆறு வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இருந்த போதிலும் காவிரியில் கூடும் பக்தர்களின் குறையை போக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு இருந்தன.

காவிரிக்கரையில் கூடிய மக்கள் நீராடி, புத்தாடைகள் அணிந்து, படித்து றையில் வாழை இலை போட்டு காவிரி தாய்க்கு காப்பரிசி, பழவகைகள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்களை படையிலிட்டு கற்பூரதீபம் காட்டி வழிபாடு நடத்தினர். புதுமணத்தம்பதிகள் தங்கள் வாழ்வில் வளமும், நலமும் பெருக வேண்டும் என பிரார்த்தனை செய்து திருமண நாளில் தாங்கள் அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர்.

சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய மஞ்சள் கயிறுகளை புதுப்பித்து அணிந்து கொண்டனர். மேலும் ஆண்களும் இந்த வழி பாட்டில் கலந்து கொண்டு காவிரி தாயை வேண்டி கையில் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொண்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் திருட்டு மற்றும் அசாம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

அம்மாமண்டபம் படித்துறை மற்றும் ஸ்ரீரங்கம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் ஜெயச் சந்திரன், ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு எழுந்தருவார். மண்டபத்தில் அலங்காரம் அமுது செய்து காவிரி தாயாருக்கு மாலை 4.45 மணிக்கு பூமாலைகள் மற்றும் மங்கல பொருட்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மா மண்ட பத்தில் இருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ் தானம் எழுந்தருளுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக