4 ஆக., 2012

ஜெ., போட்ட அதிரடி உத்தரவு



விளம்பர பேனர்களில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
படங்களை பயன்படுத்தக் கூடாது: ஜெ., போட்ட அதிரடி உத்தரவு

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலந்தொட்டு அ.தி.மு.க. கழகத்திற்கென்று வகுக்கப்பட்ட நெறிமுறைகளை தொடர்ந்து நாம் கடைபிடித்து வருகின்றோம்.

கழகம் தொடங்கப்பட்ட காலந்தொடங்கி எம்.ஜி.ஆர். உத்தரவுப்படி, நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றிற்கு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் வைக்கின்ற வரவேற்பு பலகைகள், சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தன.

புரட்சித்தலைவி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தலைமை ஏற்ற பிறகு, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டி ருந்தோம். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தரும் அமைச்சரின் புகைப்படத்தை மட்டுமே சிலர் விளம்பர பேனர்களில் போட்டுவிட்டு மற்ற நிர்வாகிகளின் படங்களை தவிர்த்து விடுகின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் அமைச்சரின் புகைப்படத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டியவர்களின் புகைப்படங்களை போட்டு விளம்பரங்கள் செய்கின்றனர்.

இதனால் கழகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அப்பகுதியில் வைத்திருக்கும் பேனர்களை கிழித்து விடுவதாக செய்திகள் வருகின்றன. இச்செயல்கள் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகின்றன.

நிகழ்ச்சிகள், விழாக்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கு கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை விளம்பரங்களில் பயன் படுத்துவதற்கு கழகத்தில் அனுமதியும் இல்லை. அத்தகைய பழக்கமும் இதுவரை கிடையாது.

எனவே கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனி வரும் காலங்களில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வருகை தரும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும், அவர்கள் வகித்து வரும் பதவி மற்றும் பொறுப்புகளையும் எழுத்துக்களில் குறிப்பிட்டால் போதும். அ.தி.மு.க.வின் நெறிமுறை களுக்கு மாறாக, இனிமேல் மற்றவர்களுடைய படங்களை போட்டு விளம்பரம் செய்யும் கழகத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக