25 ஆக., 2012

மின்வெட்டால் 'அம்மா' என கதறும் குழந்தைகளின் கதறல் 'அம்மா'விற்கு கேட்கவில்லையா? சேலத்தில் போராட்டம்!

தமிழகமெங்கும் மின்வெட்டு பிரச்சனையை புயலை கிளப்ப சேலத்திலோ அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் மின்வெட்டு ஆகிறது. அதிலும் ஆறு மணி நேரத்திற்கு மேல் இரவிலேயே அமுலாகிறது.

இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூதன போராட்டம் செய்தது. இரவு எட்டு மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் பாய் தலையணையோடு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கேயே விரித்து படுக்க தொடங்கினர்.

     
எங்க வீட்ல எல்லாம் நைட் ஆனா கரண்ட் கட் ஆகுது. இங்க தான் கவர்மென்ட் ஆபிஸ் முன்னாடி கரண்ட் (தெரு விளக்கு) இருக்கு அதனால நாங்க இங்கயே படுக்கலாம்னு வந்தோம்' என்றனர். பின் மின்வெட்டை கண்டித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் முழக்கமிட்டனர். அதன் பின் நம்மிடம் பேசிய மாநகர செயலாளர் தோழர் பிரவீன்,

'இரவு தூங்க முடியவில்லை குறிப்பாக கை குழந்தை வைத்துருக்கும் குடும்பங்கள் பெரும் அவதிபடுகின்றனர். இதில் மழை விடாமல் பெய்கிறது அதனால் கொசு தொல்லை இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதனால் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழ தாயுள்ளங்கள் துயரம் தாங்காமல் கதறுகின்றனர். மின்வெட்டால் 'அம்மா' என கதறும் குழந்தைகளின் கதறல் 'அம்மா'விற்கு கேட்கவில்லையா?

பகல் பொழுதிலும் நினைத்த நேரத்திற்கு மின்வெட்டு நடக்கிறது தொழில் செய்ய முடியவில்லை அனைத்தும் பாதிக்கப்படுகிறது ஆனால் இரண்டு இடத்தில் மட்டும் 24 மணி நேரமும் மின்வெட்டு இல்லை அது, ஆட்சியர் மகரபூசனம் பங்களா உள்ள இடம் மற்றொன்று உள்ளூர் மந்திரி எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் ஏரியா. அவர்கள் இருப்பதால் அங்கு மின்வெட்டு இல்லை தடையில்லாமல் மந்திரி வீட்டுக்கு மின் விநியோகிக்கப்பட்டால் தான் தடையில்லாமல் மின் ஊழியர்கள் பணி புரிய இயலும் போல!

இந்த மின்வெட்டை உடனே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம்' என்றார் உணர்வுப்பூர்வமாய்....       
நன்றி நக்கீரன்                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக