17 ஆக., 2012

வதந்தி பரவியதால்....

பெங்களூரு: "கர்நாடகாவில் தங்கியுள்ள, ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் மீது, தாக்குதல் நடத்தப்பட உள்ளது' என்ற வதந்தி பரவியதால், ஏராளமானோர் பெங்களூருவில் இருந்தும், அந்த மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், தங்கள் மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். இந்த வன்முறை வதந்தி, பெங்களூருவில் இருந்து நேற்று ஐதராபாத்திற்கும் பரவியதால், அங்குள்ள வட மாநிலத்தவர் மத்தியிலும் பீதி உருவானது. அசாம் மாநிலத்தில் நடந்து வரும் இனக் கலவரத்தைக் கண்டித்து, மும்பையில் நடந்த போராட்டத்தில், இருவர் கொல்லப்பட்டனர். புனேயில் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, 10 மாணவர்கள் தாக்கப்பட்டனர். இம்மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி மாணவர்கள். சிலர் ஐ.டி., நிறுவனங்களிலும், சிலர் கட்டுமான நிறுவனங்களிலும் பணி செய்கின்றனர். இவர்கள் மீது தாக்குதல் நடக்கலாமென்ற வதந்தி காரணமாக, புதன் கிழமை மாலையில் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோர் அவசரம் அவசரமாக சொந்த மாநிலம் செல்ல, பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்தனர். வழக்கமாக புதன் கிழமையன்று, இரவு, 11.30 மணிக்கு புறப்படும் பெங்களூரு - கவுகாத்தி ரயில் முழுவதுமாக நிரம்பி விட்டதால், மேற்கொண்டு டிக்கெட் வழங்க ரயில்வே நிர்வாகம் மறுத்தது. கூட்டத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் பின்னர் ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், தகவலறிந்து பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷன் வந்த துணை முதல்வர் அசோக், வடகிழக்கு மாநிலத்தினரை சந்தித்து, "தேவையான பாதுகாப்பு அளிக்க, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்றார். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளிலுள்ள வீட்டு உரிமையாளர்கள் தான், எங்களை காலி செய்யும்படி வற்புறுத்துகின்றனர்; சில சமூக விரோதிகளும் மிரட்டுகின்றனர் என்று அவர்கள் புகார் கூறினர். இவர்களில் பெரும்பாலானோர் பெங்களூருவில் கோரமங்களா, நீலச்சந்திரா, ஈஜிபுரா போன்ற பகுதிகளிலும், சுற்றுப்புறங்களிலும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நேரடியாக போன் மூலம் தொடர்பு கொண்டு பேசும் போது, "கர்நாடகாவில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தினர் உயிருக்கும்,

உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். கர்நாடகா போலீஸ் துறையும் பூரணபாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தது. இருப்பினும், சிறப்பு ரயில்கள் மூலம் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருந்தனர். நேற்று காலையிலிருந்து பெங்களூருவில் வசிக்கும் பல அசாம் மாநிலத்தினர், மூடை முடிச்சுகளுடன் பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு படையெடுத்தனர். பகலில், அசாமுக்கு ரயில் இல்லாததால், ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

சட்ட அமைச்சர் சுரேஷ்குமார், ரயில்வே ஸ்டேஷன் வந்து அசாம் பயணிகளை சந்தித்து, "யாரும் பெங்களூருவை விட்டு வெளியேற வேண்டாம்; தேவையான பாதுகாப்பை அரசு கொடுக்கும்' என்றார். ஆனாலும், அசாம் பயணிகள் கேட்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., இந்து அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர், கன்னட அமைப்பினர் பலர், ரயில்வே ஸ்டேஷன் வந்து பயணிகளை சமாதானப்படுத்தி, பெங்களூருவை விட்டு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில், முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. உள்துறை அமைச்சர் அசோக், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின், முதல்வர் ஷெட்டர் கூறியதாவது: பெங்களூருவில் அனைத்து மாநிலத்தவரும் வசிக்கின்றனர். இதுவரை யாருக்கும் பிரச்னை ஏற்பட்டதில்லை. அசாம், மணிப்பூர் மாநிலத்தினர் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். போன், எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மூலம் அவர்களுக்கு
தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வசிக்கும் அசாம், மணிப்பூர் மாநிலத்தவர் பயப்படத் தேவையில்லை. தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். தவறான தகவல் கொடுத்தவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பல்வேறு மதத் தலைவர்கள், வட மாநிலத்தவருடன், கர்நாடக போலீஸ் டி.ஐ.ஜி., தன் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு மாநிலத்தவர், பெங்களூருவை பொறுத்தவரை மிகவும் பாதுகாப்பாகவே உள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்குள்ளாகவே எழும் மோதல்களைத் தவிர, பிற இனத்தவர்களால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். "வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படலாம்' என்ற வதந்தி, நேற்று ஆந்திராவின் ஐதராபாத்திற்கும் பரவியது. அதேநேரத்தில், தமிழகத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், ஓட்டல்கள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், இங்கு அது போன்ற பீதி எதுவும் பரவவில்லை.

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக