2 ஜூலை, 2012

ஐகோர்ட்டு உத்தரவுக்கு கருணாநிதி வரவேற்பு

சென்னை,ஜூலை.2-
அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரம்: ஐகோர்ட்டு உத்தரவுக்கு கருணாநிதி வரவேற்பு 

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற தடை விதித்தனர்.

இந்நிலையில் இன்று மூத்த வக்கீல் டி.வில்சன் ஐகோர்ட்டில் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார். அந்த புகாரை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், 'இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது.

நடந்த சம்பவம் குறித்து அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்' என உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தி.மு.க தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர், 'நான் திறந்து வைத்த ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற அ.தி.மு.க அரசு உத்தரவிட்டது. அதற்கு கோர்ட்டு தடை விதித்த நிலையில், நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளித்த தமிழக அரசுக்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்டையடி ஆகும். இவ்விவகாரத்தில் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்’ என்றார்.

சென்னை,ஜூலை.2-


துணை ஜனாதிபதி பதவிக்கு யார் பெயரையும் முன்மொழிவது என் வேலையில்லை: கருணாநிதி 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியின் பெயரை முன்மொழிந்தது போல, துணை ஜனாதிபதி பதவிக்கு யார் பெயரையும் முன்மொழிவது என் வேலையில்லை என தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 'துணை ஜனாதிபதி பதவிக்கு யார் பெயரையாவது முன்மொழிந்தீர்களா?’ என கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், 'அது என் வேலையில்லை என நினைக்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரை முன்மொழிவது என் கடமை எனக் கருதி பிரணாப் பெயரை முன்மொழிந்தேன்’ என்றார்.

தனது பிரச்சாரத்தை துவங்குவதற்காக சென்னை வந்த பிரணாப் முகர்ஜிக்கு கருணாநிதி கடந்த சனிக்கிழமை இரவு உணவு விருந்தளித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிரணாப்பை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர், அவரது பெயரை கருணாநிதி முன்மொழிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக