காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரிதான் தனது தந்தை எனக் கூறி ரோகித் சேகர் என்ற இளைஞர் வழக்கு தொடர்ந்தார். திவாரி இதை மறுத்து வந்தார்.
பல்வேறு முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைக்குப் பின்னர், திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மே மாதம் திவாரியிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் அவருடைய மகன் எனக் கூறி வரும் ரோகித் சேகர் மற்றும் அவரது தாயாரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கை ஜூலை 27 திறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் திறந்து படிக்கக் கூடாது என்று திவாரி டெல்லி ஐகோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரேவா கேத்ரபால், சோதனை அறிக்கையை கோர்ட்டில் திறந்து படிக்க முடிவு செய்தார்.
மரபணு சோதனையின்படி, ரோஹித் ஷேகரின் மரபணுவும், என்.டி. திவாரியின் மரபணுவும் ஒத்துப் போவதாகவும், எனவே, ரோஹித் ஷேகர் திவாரியின் மகன்தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா சர்மா - என்.டி.திவாரிக்கு பிறந்தவர் ரோஹித் என்றும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக