14 ஜூலை, 2012

என்ன நடக்கிறது தமிழகத்தில்? கலைஞர் கேள்வி

 

தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நிலையில் அதைக் கவனிக்க முதல்வரோ அல்லது அமைச்சர்களோ தலைநகரில் இருக்கிறார்களா என தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அந்தக் காலத்தில் அரசர் அமைச்சரை அழைத்து “மந்திரி, மாநகர் தனில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பாராம்.

தற்போது அரசருக்குப் பதிலாக, நமது முதல்வர், கொடைநாட்டிற்கே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா என்று விசாரித்துக் கொண் டிருக்கிறார். முதலமைச்சர் கொடநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் “யாத்திரை” செய்ய ஆகின்ற செலவு எவ்வளவு? அதெல்லாம் மக்கள் தரும் வரிப் பணம்தானே? இன்றைய அ.தி.மு.க. ஆட்சி யிலே நேற்று ஒரு நாளில் மட்டும் என்னென்ன நடைபெற்றதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்திகளை மட்டும் தொகுத்துள்ளேன்.

(ஏடுகளில் வந்துள்ள குற்றச்சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.)

இவற்றைப் பற்றியெல்லாம் கவனிக்க முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ தலைநகரிலே இருக்கிறார்களா?

ஆனால் அன்றாடம் முதல் அமைச்சர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும், துப்புரவுப் பணியாளர் நியமனம், வருவாய்க் கிராமங்கள் உயர்வு, கவுரவ விரிவுரையாளர் நியமனம் என்று மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே “பேக்ஸ்” மூலமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு வெளி வர வேண்டியவை அல்லவா?

அவ்வாறு அந்த அறிவிப்புகள் வருகின்றனவா? செயல்படுத்தப் போகின்ற அறிவிப்புகள்தானே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம், வெறும் அறிவிப்புக்காக மட்டும்தானே என்று கேட்கலாம். அரசு என்று ஒன்று அமைந்த பிறகு, அந்த அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா?

முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்ற வர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார்.

தற்போது அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனை கொடைநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்பது உண்மையென்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்?

அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படி யென்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா, மெய்யானதா என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? காவல் துறையினரின் அந்தத் தவறான நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரை “என்கவுண்டர்” செய்ய முயற்சி நடைபெற்ற தாக இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினாரே; அதற்கு இந்த அரசின் பதில் என்ன? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யையே அவர்தான் தயாரித்துக் கொடுத்தேன் என்றார்.

முதல் அமைச்சருக்கு பேசவே தெரியாது, நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். அவைகள் எல்லாம் உண்மைகளா? இந்த அரசு அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்து, அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றுதானே மக்கள் நம்புவார்கள்.

அதன்பிறகு அவர் வாயே திறக்கவில்லையே? என்ன காரணம்? வாயைத் திறக்கக் கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா? இந்த அரசினால் பயமுறுத்தப்பட்டு விட்டாரா?

குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்ட ராவணன் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்காக கொடநாடு வந்தார் என்று ஏடுகளில் வந்த செய்தி உண்மையா இல்லையா? அது உண்மை என்றால், அவர் என்ன பேசுவதற்காக வந்தார்? அந்த உண்மைகள் எல்லாம் நாட்டிற்குத் தெரிய வேண்டியது இல்லையா? எதிர்க்கட்சியினரைப் பழி வாங்குவது ஒன்றுதானே முறையாக நடக்கிறது. வேறு என்ன நடக்கிறது நாட்டிலே? இதற்கு ஆட்சி என்றா பெயர்; “காட்சி”கள் தானே மாறி மாறி அரங்கேறுகின்றன என்று கலைஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி நக்கீரன்...

பொது மக்கள் பதில் 

வேலை அதிகமா இருக்கு எது பற்றியும் கவலை அக்கறையில்லை 
தேர்தலில் மட்டும் தான் படிப்போம் பார்ப்போம்.அப்புறம் எல்லாம் 
மறந்து போகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக