10 ஜூலை, 2012

புதுவையில் முழு அடைப்பு: தனியார் பஸ்கள் ஓடவில்லை

புதுச்சேரி, ஜுலை. 10- புதுவையில் முழு அடைப்பு: தனியார் பஸ்கள் ஓடவில்லை 

புதுவை மாநிலத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உயர்கல்வி பயில பிற பிராந்தியங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அமலில் உள்ளது. காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாமுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிராந்திய இடஒதுக்கீடான 25 சதவீதம் போக மீதமுள்ள 75 சதவீத இடங்களில் அனைத்து பிராந்திய மாணவர்களும் போட்டியிடலாம்.

இதனால் அதிக மதிப்பெண் எடுத்தும் புதுவை மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடம் கிடைப்பதில்லை. எனவே புதுவை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பிராந்திய இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, பல்வேறு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிராந்திய இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து பிராந்திய இடஒதுக்கீடு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 3 நாட்கள் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.

இதற்கிடையே முதல் அமைச்சர் ரங்கசாமி போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் முதல்- அமைச்சர் ரங்கசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி 3 நாள் பந்த் போராட்டத்தை ஒரு நாளாக குறைத்து கொள்வதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது.

இருப்பினும் புதுவையை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் அரசு பஸ்கள் எல்லை பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்றன. புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள் புதுவை பஸ் நிலையம் வரை வந்து சென்றன.

பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடின. நகர பகுதியில் பந்த் போராட்டத்திற்கு வணிகர் சங்கம் ஆதரவு அளித்திருந்ததால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்ட உள்ளிட்டவை இயங்கின.

போராட்டத்தையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பஞ்சாலைகள் இயங்கின. தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளும் வழக்கம்போல் இயங்கின.

பந்த்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நகர பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


நன்றி தினசரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக