4 ஜூலை, 2012

தி.மு.க.வினர் பயப்பட மாட்டார்கள்: கருணாநிதி பேட்டி...மறியலில் கைதான கனிமொழி பேட்டி..!

போலீசாரின் அச்சுறுத்தலுக்கு தி.மு.க.வினர் பயப்பட மாட்டார்கள்: கருணாநிதி பேட்டி
சென்னை, ஜூலை.4-

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு:-

கேள்வி: தி.மு.க. நடத்தும் இன்றைய அறப் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி கிடைத்திருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: உண்மையைச் சொன்னதற்காக நன்றி.

கே: தமிழக அரசின் காவலர் துறையினர் போராட்டத்தில் ஈடுபடவந்திருப்பவர்களை எல்லாம் பயமுறுத்துவதைப் போலப் பேசுகிறார்களே?

ப: எதிர்பார்த்தது தான்.

கே:எழுச்சி எவ்வாறு உள்ளது?

ப:எதிர்பார்க்காத அளவிற்கு உள்ளது. மிகப் பிரமாண்டமான அளவிற்கு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.

கே:அடுத்த கட்டப் போராட்டம் என்ன?

ப:இந்தக் கட்டம் முதலில் முடியட்டும்.

கே:தமிழக அரசின் நிலை மாறுமா?

ப:நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கலந்து கொள்வோரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப் போகிறோம். வேறு மாநில சிறைச் சாலைகளிலே வைக்கப் போகிறோம், கர்நாடகத் திற்கும், ஆந்திராவில் ஐதாரா பாத்திற்கும் கொண்டு போகப்போகிறோம் என்றெல்லாம் அச்சுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் யாரும் பயப்படவில்லை. யாரும் கவலைப்படுவதாகவும் இல்லை.

கே:அ.தி.மு.க. ஆட்சியினர் இந்தப் போராட்டத்திற்குப் பிறகு திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

ப:திருந்துவார்கள் என்று நம்பவில்லை. ஏனென்றால் அண்ணா அவர்களின் பெயரால் உள்ள நூலகம் உலகத் தரத்தோடு கட்டப்பட்டது. அறிஞர்களாலும், சான்றோர்களாலும் வியந்து பாராட்டப்பட்டது. அந்த நூலகத்தை இழிவுபடுத்த வேண்டும் ஆபாசப்படுத்த வேண்டு மென்பதற்காகவே திருமணங்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். எனவே இந்த ஆட்சியினர் திருந்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை.

சென்னை, ஜூலை. 4-

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: மறியலில் கைதான கனிமொழி பேட்டி 

சைதாப்பேட்டையில் நடைபெற்ற மறியலில் பங்கேற்க காலை 10 மணிக்கு கனிமொழி எம்.பி., காரில் வந்தார். அவருடன் வந்த ராஜாத்தி அம்மாள் கனிமொழிக்கு ஆசி வழங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு தி.மு.க. வினருடன் கனிமொழி எம்.பி. மறியலுக்கு சென்றார். முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன், பகுதி செயலாளர் மகேஷ் குமார் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் அ.தி. மு.க. அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.

உடனே போலீசார் கனிமொழியையும், அவருடன் வந்த தி.மு.க. வினரையும் கைது செய்தனர். அப்போது நிருபர்களிடம் கனிமொழி கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் தி.மு.க.வினர் மீது ஆதாரமும் இல்லாமல் பொய் வழக்கு போட்டு வருகிறது. இந்த ஆட்சியில் விலை வாசி உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்தாமல் தி.மு.க.வினர் மீது வழக்கு போடுவதை முக்கியமாக கருதுகிறார்கள். இது பழி வாங்கும் நடவடிக்கையாகும்.

தலைவர் கலைஞர் கட்டளையை ஏற்று நான் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் எழுச்சியோடு மறியலில் பங்கேற்று இருக்கிறார்கள். 2014-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர் சிறை செல்வது உறுதி என்பதை அறிந்து பெட்டி படுக்கையுடன் வந்து கைதானார்கள்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக