ஸ்டாலினால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த கட்சி பிரமுகர்கள் சிலரை கருணாநிதி திடீரென அழைத்துப் பேசியுள்ளது தி.மு.க.,வில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை கனிமொழியின் செல்வாக்கை உயர்த்தும் நடவடிக்கையாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உச்சகட்டத்தை நெருங்கி வரும் கோஷ்டிப் பூசலை சமாளிக்க, கட்சியின் மாநில நிர்வாகத்தை அதிரடியாக மாற்றி அமைக்க, கருணாநிதி புதுத்திட்டம் வகுத்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்புதல் வாக்குமூலம்:"ஒரு சில மாவட்டங்களில் உள்ள கோஷ்டிப்பூசல்களை, வரும் 4ம் தேதி நடக்கும் சிறை நிரப்பும் போராட்டம் ஒற்றுமைப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீர் அடித்து நீர் விலகி விடுமா என்ன?' என்ற உருக்கமான கடிதத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதி சமீபத்தில் வெளியிட்டார். "தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் பட்டொளி வீசி பறக்கிறது' என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக இந்த கடிதம் அமைந்தது.
பொதுக்குழுவில் பிரச்னை:"தி.மு.க., வின் அடுத்த தலைவராக வருவதற்கான தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது' என, ஏற்கனவே பொதுச்செயலர் அன்பழகன் பல முறை வெளிப்படுத்தினார். அந்தப் பேச்சு, கருணாநிதியின் எண்ணத்தில் உதித்தவை என, அப்போது விமர்சனம் எழுந்தது. ஆனால், இந்த எண்ணத்தை மாற்றும் வரையிலான சம்பவங்கள் தி.மு.க., பொதுக்குழுவில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக, ஸ்டாலின் ஆதரவாளர்கள் நாற்காலியை தூக்கி அடிக்க பாய்ந்த போது, கருணாநிதி மிகவும் வேதனை அடைந்தார்.
கோபம் தீரவில்லை:இந்த சம்பவங்களுக்கு ஸ்டாலின்தான் காரணம் என நினைத்த கருணாநிதி அவர் மீது கோபம் கொண்டுள்ளார்; அதனால் தான், ஸ்டாலின் அதிருப்தி அடையும் வகையில் சில முடிவுகளை தலைவர் வேண்டுமென்றே எடுக்கிறார்; கனிமொழியின் கோஷ்டியை பலப்படுத்தும் வகையில் அவரை கொம்பு சீவி விடுகிறார், என இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில், சமீபத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவில் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்திருந்தனர். விழாவில் பங்கேற்க வந்த துர்கா, அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கனிமொழியின் ஆதரவாளர்கள் என்பதுதான் காரணம். தனது கணவரின் தொகுதியிலேயே, கனிமொழியின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டதே என்ற அதிர்ச்சியோடு துர்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
கனிக்கு பச்சைக்கொடி:கட்சியில் கனிமொழிக்கு செல்வாக்கை அதிகரிக்க, ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவர்கள், சி.ஐ.டி., காலனியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கருணாநிதியின் ஒப்புதலோடுதான் இந்த கூட்டங்கள் நடக்கின்றன என்பது ஸ்டாலின் தரப்பை சூடாக்கியுள்ளது.அதோடு, ஸ்டாலின் ஆதரவாளரான ஈரோடு மாவட்டச் செயலர் ராஜா, கருணாநிதியை சந்திக்க வந்தபோது, பார்க்க விரும்பவில்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர் ஒருவர், விருப்பம் தெரிவித்த இடத்தில், சிறைநிரப்பும் போராட்டத்தின் விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தாமல், கனிமொழியின் விருப்பப்படி தாம்பரத்தில் பொதுக்கூட்டம் பேச கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மாநில நிர்வாகத்தில் மாற்றம்:ஸ்டாலினுக்கு நெருக்கமான பொன்முடி, வேலு, நேரு போன்ற எட்டு மாவட்டச் செயலர்களுக்கு மாநில நிர்வாகிகள் பதவி வழங்கி, அந்த மாவட்டங்களை இரண்டாக பிரித்து கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு மாவட்டச்செயலர் பதவி வழங்குவதற்கான ஆலோசனையும் நடந்துள்ளது.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு, மாநில அளவில் பொறுப்புகளை வழங்கி, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஸ்டாலினுடன் நெருக்கமாக பழகிய காந்தி, பரணி குமார், ரெட்டி, ஜின்னா, சிவாஜி போன்ற பிரமுகர்கள் சமீபகாலமாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது, அவர்களை கருணாநிதி அழைத்து பேசி, அரவணைத்து வருகிறார். ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட பிரமுகர்களை கருணாநிதி அழைத்து முக்கியத்துவம் கொடுப்பது, உள்ளர்த்தத்தோடு கட்சித் தலைமை செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறை நிரப்பும் போராட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு?வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி, கனிமொழி பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ளது. கண்புரை சிகிச்சையை ஸ்டாலின் மேற்கொண்டதால், தற்போது அவர் தனது கண்களில் மருந்து ஊற்றி ஓய்வு எடுத்து வருகிறார். வரும் 4ம்தேதிக்குள் போதுமான ஓய்வு அவருக்கு கிடைத்து விட்டால், தனது எம்.எல்.ஏ., வின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தலைமை ஏற்று மறியல் போராட்டத்தில் பங்கேற்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறை நிரப்பும் போரட்டத்தில் பங்கேற்க கோர்ட் அனுமதி பெறவும் கனிமொழி முடிவு செய்துள்ளதால், வரும் 2ம்தேதி டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கனிமொழி சார்பில் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்கிறார். போராட்டத்தில் பங்கேற்க நீதிபதி அனுமதி அளித்தால், அவர் சிதம்பரத்தில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா போன்றவர்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்செயலர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால், மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் பங்கேற்கலாம் என, கூறப்படுகிறது.
நன்றி -நமது நிருபர் -தினமலர்
இந்த படமே கொஞ்சம் நெருடலை தருகிறது...கட்சியில் யாருக்கு இன்றைய
செல்வாக்கு என்ற வாக்கு எதிரொலியா என்று....
உங்கள் முடிவு உங்கள் வாய் மூலம் தெளிவாய் வரும் வரை குழப்பம் தான் தலைவரே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக