8 ஜூலை, 2012

ஓராண்டை பூர்த்தி செய்வதற்காக 30 நாட்கள் பதவியில் நீடிக்க விரும்பும் சதானந்த கவுடா

புதுடெல்லி, ஜூலை. 8- ஓராண்டை பூர்த்தி செய்வதற்காக 30 நாட்கள் பதவியில் நீடிக்க விரும்பும் சதானந்த கவுடா 
கர்நாடகாவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார். 

எடியூரப்பாவின் ஆதரவாளராக இருந்து வந்த சதானந்த கவுடா, முதல்- மந்திரி ஆன பிறகு தனி கோஷ்டியை தொடங்கி விட்டார். இதனால் அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து விரட்டி விட்டு தன் லிங்காயத் இனத்தை சேர்ந்த ஜெகதீஷ்ஷெட்டரை முதல்-மந்திரியாக்க எடியூரப்பா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால், தன் ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கப்போவதாகவும் மிரட்டினார். 

இதையடுத்து இரு கோஷ்டிகளையும் டெல்லிக்கு வரவழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேசினார்கள். அப்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சதானந்த கவுடா சம்மதித்தார். எனவே கர்நாடக புதிய முதல்-மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டர் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சதானந்த கவுடா முதல்-மந்திரி பதவியில் இன்னும் 30 நாட்களுக்கு நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் பதவியேற்று வருகிற ஆகஸ்டு 4-ந்தேதியுடன் ஓராண்டு பூர்த்தி ஆகிறது. எனவே ஓராண்டு பதவியில் இருந்த திருப்தியுடன் பதவி விலக விரும்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவரது இந்த கோரிக்கையை எடியூரப்பா ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. இதனால் சதானந்த கவுடா விரக்தி அடைந்துள்ளார். 

நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இதுதொடர்பாக சதானந்த கவுடா கூறியதாவது:- 

பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை இன்று சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். அப்போது ஆட்சியை ஓராண்டு பூர்த்தி செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்வேன். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதால் நான் ஏமாற்றம் அடையவில்லை. ஆனால் நான் ராஜினாமா செய்வதால் அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் கர்நாடக பா.ஜ.க.வுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி சண்டை முடிவுக்கு வந்து விடும் என்று நம்புகிறேன். 

கர்நாடகாவில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் வறட்சி நிவாரணம் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயி யாராவது உயிரிழந்தால் பெரும் பிரச்சினையாகிவிடும். 

அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கடந்த 11 மாத ஆட்சியில் நான் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுத்துள்ளேன். எனது நிர்வாகம் எனக்கு முழு திருப்தியைக் கொடுத்துள்ளது. பதவி விலகினாலும் நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். 

ஜெகதீஷ் ஷெட்டருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர் அனுபவம் வாய்ந்த நல்ல மனிதர். அவர் முதல்-மந்திரி பதவியேற்ற பிறகு நல்ல நிர்வாகத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன். 

அரசியல் என்பது கபடி ஆட்டம் மாதிரிதான். கபடி ஆட்டத்தில் ஒருவர் காலை பிடித்து வாரிவிட இன்னொருவர் எப்போதும் தயாராக இருப்பார். இன்று நான் கபடி ஆட்டத்தில் அவுட் ஆக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் வருந்தவில்லை. 

இந்த பிரச்சினையால் வறட்சி நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலை தருகிறது. எனவே வறட்சி நிவாரண பணியை புதிய முதல்வர் முடுக்கி விடவேண்டும். 

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

நன்றி தினசரி
ஓராண்டு சாதனையாய் பி ஜே பி கொண்டாடட்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக