5 ஜூன், 2012

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு


முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் புழல் சிறையில் அடைப்பு

சேலம், அங்கம்மாள் காலனி குடிசைகளுக்கு தீ வைத்த வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, 04.06.2012 அன்று இரவு சேலம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்திய போலீசார், மீண்டும் சென்னைக்கே அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர். 

சேலம், அங்கம்மாள் காலனியில், சிலர் குடிசை போட்டு வசித்தனர். கடந்த 2ம் தேதி இரவு, மர்ம நபர்கள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்தனர். 

அவரை, சென்னையில் இருந்து சேலத்துக்கு வேனில் அழைத்து வந்த போலீசார், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அய்யந்திருமாளிகையில் உள்ள ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் லட்சுமி வீட்டில், அவரது முன்னிலையில் இரவு 10 மணிக்கு ஆஜர்படுத்தினர். 

வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவர், உடல் நிலையை கருத்தில் கொண்டு, சிறையில் சிறப்பு வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று, மாஜி அமைச்சரின் வக்கீல் சீனிவாசன், மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுத்தார். அதையடுத்து, வீரபாண்டி ஆறுமுகத்தை, போலீசார் வேனில் ஏற்றினர்.

இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தை பார்ப்பதற்காக, மாஜிஸ்திரேட் வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள், போலீஸ் வேனை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய குடும்பத்தினரும் இரவு 8 மணி முதல், மாஜிஸ்திரேட் வீடு அருகே காத்திருந்தனர்.கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசார், இரவே சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

நன்றி நக்கீரன்:-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக