7 ஜூன், 2012

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மனு தள்ளுபடி


சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மனு தள்ளுபடிகால் மூட்டு, சர்க்கரை நோய் ஆகியவைகளுக்கு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை தரக்கோரி `சரவண பவன்' ஓட்டல் அதிபர் பி.ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் பி.ராஜகோபாலுக்கு (வயது 66) ஆயுள் தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ராஜகோபாலின் பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் ராஜகோபால் மனு ஒன்றைதாக்கல் செய்தார்.


அம்மனுவில்,    ‘’என் மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் நான் மேல் முறையீடு செய்துள்ளேன்.


இந்த நிலையில் எனது 2 கால் மூட்டுகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 


வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் எனக்கு சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களும் உள்ளன. இதற்கும் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டியதுள்ளது.
நான் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தி வருகிறேன். என்னை நம்பி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக நான் எனது உடல் நலனை பாதுகாக்கவேண்டியது அவசியம்.
எனவே வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள எனது பாஸ்போர்ட்டை வழங்க உத்தரவிட வேண்டும். சிகிச்சை முடிந்த பிறகு நான் அதை மீண்டும் கோர்ட்டில் ஒப்படைத்துவிடுவேன்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேளச்சேரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராஜகோபாலன் பிறப்பித்த உத்தரவில்,
’’மனுதாரர் வெளிநாட்டில் சிகிச்சை பெற செல்வதற்காக பாஸ்போர்ட் தேவை என்கிறார். ஆனால் அவர் சிகிச்சைக்கு எங்கு பெற போகிறார், எங்கு தங்கப்போகிறார், என்னென்ன நோய்களுக்காக சிகிச்சை பெறப்போகிறார் என்பதற்கான ஆதார ஆவணங்கள் எதையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை.
வெளிநாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் உயர்தரமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் உள்ளன. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் எம்.பிரபாவதி வாதம் செய்தார்.
மனுதாரர் தான் பெறப்போகும் சிகிச்சை குறித்து எந்த ஆதாரங்களையும் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. அவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
எனவே இந்த சூழ்நிலையில், வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்று ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க முடியாது. கால் மூட்டு சிகிச்சை வழங்கும் நல்ல ஆஸ்பத் திரிகள் இந்தியாவில் உள்ளது. எனவே வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கக்கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக