18 ஜூன், 2012

பொது வேட்பாளராக நிறுத்த முடிவு: அப்துல் கலாமுடன் பா.ஜனதா தலைவர் சந்திப்பு

புதுடெல்லி, ஜூன். 18-
பொது வேட்பாளராக நிறுத்த முடிவு:  அப்துல் கலாமுடன் பா.ஜனதா தலைவர் சந்திப்பு 
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நிலை என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை. நேற்று நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எந்த முடிவு எடுக்கப்படவில்லை.

பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலை யில் மம்தா பானர்ஜி அறிவித்த அப்துல் கலாமை ஆதரிப்பதா? பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதா? என்று தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

இதற்கிடையே அப்துல் கலாமுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகி வருகிறது. இணைய தள பேஸ்புக் மூலமும், எஸ்.எம்.எஸ். மூலமும் அப்துல் கலாம் போட்டியிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அவர் மக்கள் நிறுத்தும் பொது வேட்பாளராக மாறி வருகிறார்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பற்றி அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் அவர் வரவில்லை. தனக்கு வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று தன்னை சந்தித்தவர்களிடம் கூறினார். கட்சிகள் எடுக்கும் நிலையை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

மக்கள் ஆதரவு இருப்பதால் அப்துல்கலாமை ஆதரிக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா வந்துள்ளதாக தெரிகிறது. அப்துல் கலாமா? சங்மாவா? என்று பரிசீலித்ததில் அப்துல் கலாமே முன்னணியில் இருக்கிறார். எனவே அவரை ஆதரிக்கலாம் என்று முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்துல் கலாமை பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்னி டெல்லியில் இன்று காலை திடீர் என்று சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் கலாமை சந்தித்த குல்கர்னி, பாரதீய ஜனதாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி அவரை போட்டியிட வற்புறுத்தி இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று இரவு 9 மணிக்கு மீண்டும் நடக்கிறது. இதில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

முன்னதாக கூட்டணி தலைவர்களிடமும், மாநில முதல்-மந்திரிகளிடமும் பேசி ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையில் கருத்தொற்றுமை ஏற்படுத்தும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்துல் கலாமுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் மோகன் பகவத் கூறுகையில், அப்துல் கலாம் தலைசிறந்த மனிதர், எனவே அவரை பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவசேனாவும் தனது நிலையில் இருந்துபின் வாங்கி அப்துல்கலாமை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அப்துல்கலாம் போட்டியிட தயார் என்று அறிவித்தால் சங்மா முடிவில் மாற்றம் ஏற்படலாம். அவரை அவர் சார்ந்த தேசியவாத காங்கிரசே ஆதரிக்கவில்லை. எனவே நிலையான வேட்பாளரை தேர்வு செய்யும் வரை சங்மா போட்டியில் இருப்பதாக சொல்வார், அப்துல் கலாம் போட்டியிட்டால் அவர் விலகிக் கொள்வார்.

சங்மாவுடன் நேற்று மம்தா பானர்ஜி டெலிபோனில் பேசி போட்டியில் இருந்து விலகி அப்துல் கலாமை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். சங்மா விலகிக் கொண்டால் அ.தி.மு.க., பிஜூ ஜனதா தளம் கட்சிகள் அப்துல் கலாமை ஆதரிக்க முன் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆதரவு அதிகரிப்பதால் அப்துல் கலாம் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது.

அப்துல் கலாமுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.



நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக