19 ஜூன், 2012

பெப்சி தேர்தல்: இயக்குனர் அமீர் வெற்றி

பெப்சி தேர்தல்: இயக்குனர் அமீர் வெற்றி


பெப்சி என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த சம்மேளனத்தில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு இயக்குனர் அமீரும் இயக்குனர் விசுவும் போட்டியிட்டனர்.பொதுச் செயலாளர் பதவிக்கு சிவா, உமாசங்கர், முரளி ஆகியோர் போட்டியிட்டனர். துணைத்தலைவர், துணை பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் திரைத்துறையை சார்ந்தவர்கள் போட்டியிட்டனர்.

பெப்சி அமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன. இவற்றில் 25000 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வடபழனியில் உள்ள பெப்சி சம்மேளன கட்டிடத்தில் நடைபெற்ற இத்தேர்தலில், ஒவ்வொரு சங்கத்திலும் உள்ள தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு முடிந்ததும், இன்று மதியமே வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 68 வாக்குகள் பதிவாகின. இதில் பாரதிராஜாவின் வாக்குகள் சர்ச்சைக்குரிய முறையில் இருந்ததால் அவரின் வாக்கு நீக்கப்பட்டது. மீதமுள்ள 65 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் விசுவை விட அதிக வாக்குகள் பெற்று இயக்குனர் அமீர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமீருக்கு ஆதரவாக 37 வாக்குகள் கிடைத்தன. விசுவிற்கு 28 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அமீர் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அமீரின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக