ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக வீராவேசம் பேசிய தே.மு.தி.க., அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த்தை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும், முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தை விட்டுத்தர, அவர்கள் முன்வரவில்லை. இதனால், தலைமையின் முடிவை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
புறக்கணிப்பு:தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன், 5,104 ஓட்டுக்களை வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, அக்கட்சி சொன்ன காரணம், "நதிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில், மத்திய அரசால், தமிழக மக்களுக்கு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என்பது தான்.இதைக் கேட்டதும், காங்கிரஸ் நிர்வாகிகள், "தே.மு.தி.க., தேர்தலை புறக்கணிக்கக் கூடாது' என்று, கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சிலர், தே.மு.தி.க., நிர்வாகிகளை சந்தித்து, இதுகுறித்து ரகசிய பேச்சும் நடத்தி வருகின்றனர். தி.மு.க., தரப்பிலும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. சங்மாவிற்கு ஆதரவாக, விஜயகாந்திடம் பேசப்படும் என்று அறிவித்த பா.ஜ., நிர்வாகிகளும், இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தலை கால் புரியலை...:அ.தி.மு.க.,வை தவிர்த்து, முக்கிய தேசிய கட்சிகள் தங்களை தொடர்பு கொண்டதும், தே.மு.தி.க., தரப்பில், குறிப்பாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில், "நம்ம மவுசு நமக்கே தெரியலை' என்று பேசிக் கொண்டனர். நமக்கு கிடைக்கும் கொஞ்ச அந்தஸ்தையும், இழக்கக் கூடாது என, ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, நாமும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் என்பது, அவர்கள் எண்ணமாக உள்ளது.இதனால், தே.மு.தி.க., தலைமைக்கு, நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். தேசிய அரசியலில் கால் வைக்க வேண்டும் என்றால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தழுவாத "கை'களாக இருந்து என்ன பயன், ஒரு இனிய உதயத்துக்கு வழி வகுப்போம் என, குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
உசுப்பேத்தி, உசுப்பேத்தி...:தே.மு.தி.க., தலைமை, ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அதற்கு,"பல்ஸ்' பார்த்துள்ளது என்பதே உண்மை என, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். புறக்கணிப்பை வாபஸ் பெறுவது குறித்து, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தில், தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில், குறிப்பாக, ஜெயிக்கிற பக்கம் தாவுவதற்கு, இப்பவே தயாராகி விட்டனர் என்பதே உண்மை.மாநிலத்தில், ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களாகி, பிரயோஜனமில்லை என்றாகி விட்டது. மத்தியிலாவது, கிடைக்கிற வாய்ப்பை வளைச்சுப் போடுங்கோ என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.
நன்றி தினமலர்:
இது கட்சியை குழப்பும் நிலையா இல்லையா எட்டப்பர்கள் சதியா
வதந்தியா ?பொறுத்திருந்து பார்க்கலாம் ...அரசியல் களம் கலை கட்ட துவங்கிவிட்டது......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக