26 ஜூன், 2012

"இடமாறுதல் செய்தாலும் எனக்கு கவலையில்லை': கலெக்டர் ஆவேசம்


 
சேலம்:சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னையில், அங்கு வாழும் மக்களை, தமிழக அரசு ஆதரிக்கும் போது, கலெக்டர் ஏற்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு, ""அரசே இடமாற்றம் செய்தாலும், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை,'' என, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் ஆவேசமாக கூறினார்.
சேலம் மாநகரின் தலையாய பிரச்னைகளுள் ஒன்றாகி விட்டது, அங்கம்மாள் காலனி. தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அங்கிருந்த, 30 குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்டது.நிலத்தை மீட்டுத் தருமாறு, அங்கம்மாள் காலனி மக்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவும், தேர்தல் பிரசாரத்தின் போது, நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அங்கம்மாள் காலனி பிரச்னை தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யப்பட்டனர். அதன்பின், அந்த இடத்தில், வெளியேற்றப்பட்ட மக்கள், குடிசை போட்டு அமர்ந்தனர்.கடந்த 3ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள், அங்குள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்தினர். இந்த வழக்கில், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட, 30 பேர் மீது, வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அங்கம்மாள் காலனி வழக்கில், அலட்சியமாக செயல்பட்டதாக, போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்டோரை அதிரடியாக இடமாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டது.

குடிசைகளை இழந்த அங்கம்மாள் காலனி மக்கள், தங்களுக்கு மீண்டும் அதே இடத்தில் வசிப்பதற்கான வாய்ப்பை, மாவட்ட கலெக்டர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்; முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி, முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக கொடுத்த அறிக்கையை, ரத்து செய்ய வேண்டும்; கலெக்டர் நேரடியாக இடத்தை பார்வையிட்டு, அந்த இடத்தில் வீடு கட்டி அமர்வதற்கு, வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு, சேலம் கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து மனு அளித்தனர். இதற்கு, நிலத்துக்கு உரிய மூலப்பத்திரத்தை, முதலில் கொண்டு வாருங்கள்; பின், பேசிக் கொள்ளலாம் என கூறி, அவர்களை மாவட்ட கலெக்டர் வெளியில் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வெயிலில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயம் கிடைக்கும் வரை, இந்த இடத்தில் இருந்து போகமாட்டோம் என, தலையில் முக்காடு போட்டபடி, நீண்ட நேரம் இருந்தனர்.அங்கம்மாள் காலனி மக்களால், பிரச்னை எழுந்து விடக்கூடாது என்பதற்காக, உதவி கமிஷனர் ரவி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்பிரச்னை குறித்து, கலெக்டர் மகரபூஷணத்தை, நிருபர்கள் சந்தித்த போது, அவர் கூறியதாவது:இது, பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. அந்த பிரச்னையை, டி.ஆர்.ஓ., கூறுவார். ஆர்.டி.ஓ., போட்ட உத்தரவை ரத்து செய்ய, எங்களுக்கு அதிகாரமில்லை. உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் வெளியில் காத்திருந்தால் இருக்கட்டும்; ஒரு நிலம் என்று இருந்தால், அதற்கு மூலப்பத்திரம் ஒன்று இருக்கும். அதைத் தான் நான் கேட்டேன் என்றார்."அங்கம்மாள் காலனி பிரச்னை நீண்டு கொண்டே போகிறதே, இதற்கு ஒரு முடிவு ஏற்படாதா, தமிழக அரசு அங்குள்ள மக்களை ஆதரிக்கும்போது, கலெக்டர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்' என, நிருபர்கள் கேட்டபோது, ""இந்த பிரச்னையில், அரசு என்னை இடமாற்றம் செய்தாலும், எந்த கவலையுமில்லை. இதைவிட்டு, வேறு ஒரு பணிக்கு தான் செல்லப் போகிறேன்,'' என, ஆவேசத்துடனும், சற்று குழப்பத்துடனும் பதில் அளித்தார்.

அங்கம்மாள் காலனி விவகாரத்தில், கலெக்டர் அதிரடியாக இடமாற்றம் குறித்து பேசியது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக