3 ஜூலை, 2012

முன் எச்சரிக்கை கைதை தவிர்க்க சென்னை தி.மு.க.வினர் புறநகர் பகுதியில் தஞ்சம்

சென்னை, ஜூலை. 3-
முன் எச்சரிக்கை கைதை தவிர்க்க சென்னை தி.மு.க.வினர் புறநகர் பகுதியில் தஞ்சம் 
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நாளை (புதன்கிழமை) சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்பெல்லாம் இல்லாத வகையில் புதிய வியூகங்களை வகுத்துள்ளனர்.

சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கைதாகும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கண்டிப்பாக ஜெயிலுக்கு செல்லவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் தங்களை தயார் படுத்திக் கொண்டு போராட்டத்துக்கு வரவேண்டும் என்று கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள 16 பகுதிகளிலும் வட்ட வாரியாக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்ல தயாராக இருப்பவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரிடமும் பெயர், விலாசம், அங்க அடையாளத்துடன் கையெழுத்து வாங்கி உள்ளனர்.

இதன்படி சென்னையில் மட்டும் 32 ஆயிரம் பேர் சிறை செல்ல விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். நாளை போராட்டம் முழு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஒருவர் கூட முன் எச்சரிக்கையாக கைதாகக்கூடாது என்று கட்சி தலைமை கண்டிப்புடன் கட்டளையிட்டுள்ளது.

இதனால் சென்னையில் உள்ள தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் நேற்று மாலையே புறநகர் பகுதிகளுக்கு சென்றுவிட்டனர்.

தோட்டங்களிலும், லாட்ஜூகளிலும், கட்சிக்காரர்கள் வீடுகளிலும் அவர்கள் தங்கி இருக்கிறார்கள். தோட்டங்களில் தங்கி இருப்பவர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். விடுமுறை கொண்டாட்டம் போல் உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்கள்.

நாளை (புதன்) காலை 8 மணிக்கு அனைவரும் சென்னைக்குள் வருகிறார் கள். இதுபற்றி தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதுவரை தி.மு.க. பல போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த போராட்டம் கட்சியை காக்கவும், தொண்டர்களை காக்கவும், அநியாயத்தை, அடக்குமுறையை கண்டிக்கவும் நடத்தும் போராட்டம். எனவே ஒவ்வொருவரிடமும் போராட்ட உணர்வு அதிகமாக உள்ளது. இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

இதற்கிடையில் முன் எச்சரிக்கை கைது நடவடிக்கை இன்று தொடங்கியது. சைதாப்பேட்டை பகுதியில் கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்ற போலீசார் ஏமாற்றத் துடன் திரும்பினார்கள்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக