8 ஜூலை, 2012

பெரியார்.தி.க. பிரமுகர் கொலை:போலீசார் நடவடிக்கை...


ராயக்கோட்டை, ஜூலை. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த அலேசீபம் ஊராட்சி பாலே குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (வயது47). இவர் பெரியார் திராவிடர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.

நேற்று காலை இவர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தபோது துப்பாக்கியால் சுட்டும், தலை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 3 கார்களில் வந்த கும்பல் இவர்களை கொன்று விட்டு தலைமறைவானது.

இந்தக்கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீட்சித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது உடல் நேற்று இரவு 8 மணிக்கு பாலே குளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பெரியார். திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை அவரது உடல் அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

இதையொட்டி பாலேகுளம் மற்றும் சந்தூர் கிராமத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதுபோல பழனிசாமியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்துக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பாக போலீசார் சென்றனர்.

இந்தகொலை குறித்து பழனிசாமியின் மகன் வாஞ்சிநாதன் உத்தனப் பள்ளி போலீசில் புகார் செய்து உள்ளார். அந்த புகாரில் தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் ஆட்கள் வந்து தனது தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமய்யா, கெல மங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், பெரியசாமி, சப்படி முனிராஜ், சாதப்பா மற்றும் அடையாளம் தெரிந்த 15 பேர் உள்பட 22 பேர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

இவர்கள் மீது 147 (சட்ட விரேதமாக கூடுதல்), 148 (சட்ட விரோதமாக கலகம் விளைவிக்கும் வகையில் எண்ணத்தில் கூடுதல்), 341 (சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல்), 307 (கொலை முயற்சி), 129(பி)-(கூட்டு சதி, கொலையுடன் இணைந்த வெடிபொருட்கள் உபயோகப்படுத்துதல் சட்டம் மற்றும் படைக்கலன் சட்டம்-லைசென்சு இன்றி துப்பாக்கி பயன்படுத்துதல்) உள்பட 11 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வீடு தளி அருகே உள்ள வரகானப் பள்ளி கிராமத்தில் உள்ளது. அங்கு போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அவர் மட்டுமல்ல இந்தக்கொலை வழக்கில் தேடப்படும் 22 பேரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய கோர்ட்டுகளில் சரண் அடையலாம் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். இதனால் கோர்ட்டுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சரண் அடைய வரும் 22 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பழனிசாமி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2002-ம் ஆண்டு தளி ஒன்றிய சேர்மன் வெங்கடேசன் (தி.மு.க.) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது. அதேபோல கடந்த 1993-ம் ஆண்டு ராயக்கோட்டை அருகே மொல்லம்பட்டியில் முனியம்மாள் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் இவர் குற்றவாளியாக சேர்க்கப் பட்டு இருந்தார். இது தவிர வேறு சில வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளது.

இந்தக் கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ ராமச்சந்திரன். அவரது அண்ணன் வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், பெரியசாமி, சப்படி முனிராஜ், சாதப்பா உள்பட 22 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இன்று 4-வது நாளாக அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க பெங்களுர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். ஆனாலும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் யாரும் அவர்களது குடும்பத்தினருடன் செல்போனில் தொடர்பு கொள்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை நடந்த பிறகு போலீசாரால் தேடப்படும் 7 முக்கிய பிரமுகர்கள் சிலருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்கள் பேசிய நபர்களையும் போலீசார் வரவழைத்து விசாரித்து வருகிறார்கள்.

எம்.எல்.ஏ.வின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எம்.எல்.ஏவின் உதவியாளர் கஜேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.வின் உறவினர்கள் நடத்தும் கல்குவாரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், எம்.எல்.ஏக்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

2-வது நாளாக எம்எல்.ஏ உதவியாளரிடம் விசாரணை நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கிருண்னப்பாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுதவிர எம்எல.ஏ.வின் சொந்த ஊரான கெலமங்கலத்தை அடுத்த வரகானப்பள்ளியிலும் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனாலும் போலீசாருக்கு எம்.எல்.ஏ உள்பட 22 பேரும் தலைமறைவாக உள்ள இடம் தெரியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீட்சித் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பிக்கள்-20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 4-வது நாளாக ஓசூர் மற்றும் தளியில் முகாமிட்டு உள்ளனர்.

இந்தக் கொலையில் பரபரப்பு திருப்பமாக இன்னொரு முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அந்தத் தகவலை போலீசார் வெளியிடாமல் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள். இதனால் இன்னும் ஓரிரு நாளில் இந்தக் கொலையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் இன்று காலை பெங்களுரில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறிதது ஓசூரில் முகாமிட்டு இருந்த சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரிடம் நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:

பெரியார் தி.க. பிரமுகர் கொலை மற்றும் நாங்கள் தேடும் குற்றவாளிகள் பற்றிய பிரச்சினை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சினை ஆகும். இதில் நாங்கள் அவசரப்பட்டு எதுவும் கூற முடியாது. இன்று மாலை அல்லது இரவுக்குள் முக்கியமான தகவல் ஒன்று உங்களுக்கு கூறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அபிஷேக் தீட்சித்(கிருஷ்ணகிரி), அமீத்குமார் சிங் (தர்மபுரி), அஸ்வின் கோட்னீஸ் (சேலம்) ஆகியோர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பிக்கள், 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஓசூர் மற்றும் தளியில் முகாமிட்டு உள்ளனர்.

நன்றி தினசரிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக