4 செப்., 2012

புதுக்கவிதை தாத்தா மு .மேத்தா...

பெரிய குளத்தின் பீடுமிகும் கவிஞரே! உங்கள் இளம்வயதின் நினைவுகளை எங்களுக்குச் சொல்வீரா?

""வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவைதான். புழுதியில் புரண்ட பூக்களாக நாங்கள் இருந்தோம். அற்புதமான நல்ல நண்பர்கள் எனக்கு வாய்த் திருந்தார்கள். சிறகு முளைக்கும் முன்னே வானில் பறந்த பறவைகளைப்போல், எதுவும் அறியும் முன்னே நாங்கள் இலக்கியம் படைக்க ஆரம்பித்தோம். அந்த வயதில்தான் நான் அதிகம் படித்தேன். அரசியல் மேடைகளில் இளைய கதாநாயகனாக உலாவந்தேன். பெரியகுளம் விக்டோரியா நினைவு கழக உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவனாக பதவியில் இருந்தேன்.

அங்கே ஒரு மந்திரிசபை அமைத்தோம். மாணவர் தலைவர்தான் முதலமைச்சர். என் வாழ்வில் என் தந்தை எனக்குக் கொடுத்ததுதான் அதிகம். கேட்டது எதுவுமில்லை. பள்ளியில் நான் மந்திரிசபை அமைத்தபோது அவர் என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் குடும்ப வைத்தியரின் மகனை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். என் சகாக்களிடம் யோசித்துவிட்டுச் சொல்வதாக சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னேன். இறுதியில் என் நெஞ்சில் நிறைந்த தந்தையின் வேண்டு கோளை நிராகரித்தேன். சின்ன வயதிலேயே நேர்மைத் தராசை கையில் தூக்கிக்கொண்டு நடந்தேன். இன்றுவரை அந்தத் தராசை கீழே போட எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் சில சமயங்களில் நானே கீழே விழுந்து நொந்துபோக நேர்கிறது. ஆனால் அந்த காயங்களைத்தான் என் கௌரவங்கள் என்று கருதுகிறேன். எனக்கு வாய்த்த என்னுடைய நண்பர்களான ஆறுமுகம், முகமதுமைதீன், ஆறீஸ்வரன், வேலுச்சாமி, சிவஞானம், சிவநேசன், பாலகுமார் போன்றோர் லட்சியத்தோடு நான் வளர்வதற்கு உரமாக நின்றார்கள். வழிமாறாமல் உயர்வதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கினார்கள். இன்னும் பகிர எவ்வளவோ இருக்கின்றன.''

"ஈர விழிக் காவியங்கள்' எழுதி வெளியிட்டவரே!
எழுதி வெளியிட்டதனால் எவர் மனதைத் தொட்டீர்கள்?

"" இன்று ஏராளமான கவிதைகளை எழுதும் இளைஞர்களையும் அவற்றை வாசிக்கிற மூத்தவர்களையும் தொட்டேன். அவர்கள் நெஞ்சில் வேர்விட்டேன்.''




மரபுக் கவிதைகளால் மனம் மகிழ்ந்த நாயகரே!
புதுக்கவிதைக் காதலியைக் கரம்பிடித்ததெதனாலே?

""சமூகத்தில் குமுறல்களை வெளிப்படுத்த வேலியில்லாத ஒரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. சுவரேறிக் குதிப்பதற்கு பதிலாக சுவர்களைத் தகர்த்து விட்டு வானம்பாடிகளாய் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். "சொற்புதிது பொருள் புதிது வளம் புதிது ஜோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி பாடினானே, அவற்றைப் படைப் பதற்கு புதுக்கவிதை வாகனத்தில் பயணம் செய்தோம்.''

அழகுத் தமிழுக்கு ஆணிவேர் ஆனவரே!
உங்கள் தமிழுக்கு உயிர்வேராய் இருந்தவர் யார்?

""இளங்கோவும் வள்ளுவனும் கம்பனும் துருவ நட்சத்திரங்களாய் எனக்குத் திசைகாட்டினார் கள். பாரதியும் பாரதிதாச னும் எனக்குள் இசை மீட்டினார்கள். ஏழை எளிய மனிதர்கள் எனக்கு கவச உடை பூட்டி, தங்களுக்காகப் போரிட களத்தில் நிறுத்தினார்கள். கவிஞர் சிற்பி என் னைப் பற்றி இப்படி குறிப்பிடு வார்... "சமூகமே இக்கவிஞரின் ஆலயம். அதன் போர்க்களமே இவரின் கீதலயம்.''

கவிதைக்கு அழகு கற்பனையா?
இல்லை பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தானா?

""பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தான் எந்த இலக்கிய வடிவத்தையும் எழுச்சி பெறச் செய்கிறது. வண்டுகளாய் மட்டுமே சுற்றித் திரியாமல் வாள்களாகவும் வேல்களாகவும் மாறவேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை தீர்மானிக்கிறது.''

காதலே இல்லாத உலகத்தில் சில நாட்கள்
வாழச் சொன்னால் வாழ்வீரா சொல்லுங்கள்?

""வாழ்வேன். இதோ இப்போது உங்கள்முன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன். வெறும் வியாபாரிகளுக்கு மத்தியில் படைப்பாளிகளும் வாழத் தானே வேண்டியிருக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் பேச்சு நின்றுவிடும். அதுவரை பேசாதிருக்க இயலுமா?''

இந்த உலகை இயக்கும் சக்தி எதனிடம் உள்ளது? எடுத்துச் சொல்லுங்கள்?

""உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக் கும் சக்தி, எந்த பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளது.''

யுத்தக் களத்தில் வென்றவர்கூட
முத்தக் களத்தில் தோற்பது எதனால்?

""யுத்தக் களத்தில் எதிரி யார் என்பது தெரிகிறது. முத்தக் களத்தில் காதல் எது- மோதல் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.''

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் நீங்கள்
யாராகப் பிறக்க ஆசைப் படுவீர்கள்?

""இதில் நான் பிறவாமை வேண்டும் என்று கூறிய பெரியார் கட்சி.''

மனது நிரம்புவது மரபிலா? இல்லை
புதுக்கவிதை எழுதும் பொழுதிலா? சொல்லுங்கள்!

""கோப்பை நிரம்புவது வெந்நீரிலா தண்ணீரிலா என்று கேட்பதைப் போன்ற கேள்வி இது. மரபோ புதிதோ அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. மரபிலும் நல்ல கவிதைகள் உண்டு. புதுக்கவிதையிலும் வெறும் வசனங் கள் வந்துவிடுவதுண்டு. நல்ல கவிதைக்கு வடிவம் முக்கியம். இரண்டிலும் அது இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதையெல்லாம் சிறந்தது என்று கூறமுடியாது. அடடா என்று எது நம்மை மறந்து ஆனந்தமாய் அலற வைக்கிறதோ- அது நம் மனதை நிரப்பிவிட்டது என்று அர்த்தம்.?''

சிறகு முளைத்த எழுதுகோல் கொண்டவரே!
உங்கள் வானம் காதலா? சமூகமா?

""சமூகத்தின்மீதான காதல்.''

தலைநரைக்கும் வயதிலும் உங்கள் எழுத்து இளமையாக இருக்க என்ன காரணம்?

""இதயம் எப்போதும் இளமை யாகவே இருக்கிறது. ஒரு முடி நரைக் கும்போது உள்ளுக்குள் புதிய பூக்கள் ஏராளமாய்ப் பூக்கின்றன. அவை முடிசூடிக் கொள்வதால் நாம் அகதி ஆவதில்லை. நம் எழுத்துக்கு அகவை யும் ஆவதில்லை.''

மரபில் உங்கள் மனம்கவர்ந்த கவிஞர்கள் யார்? பட்டியலிட்டுப் பதமாகச் சொல்லுங்கள்...

""நான் வாழும் காலத்தில் என்னோடு வாழ்ந்த, வாழ்கின்ற கவியரசர் கள் மீரா, ரகுமான், பாலா, சிற்பி, இன்குலாப், சேலம் தமிழ்நாடன் இன்னும் பலர். பட்டியல் கொடுக்க நான் விரும்பவில்லை.''

தித்திப்புத் திரையுலகில் திருக்கவியே
நீங்கள் நுழைந்த தருணத்தை விரிவாகச் சொல்லுங்கள்...

""தற்செயலாய் நேர்ந்ததுதான் என்னுடைய திரைப்பயணம். என்னோடு தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுடைய தந்தை, தென்தமிழ்நாட்டு நாடக உலகில் புகழ்பெற்ற உடையப்பா ஆவார். "அனிச்சமலர்' என்று அவர் ஒரு படம் எடுத்தார். படிக்கும்போதே அவர் என் பாட்டுப் பணிகளை அறிந்தவர். ஆதலால் அவருடைய படத்தில் முதல் பாடலையே நான்தான் எழுதவேண்டும் என்று அழைத்தார். ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வாசலில் நின்று வரவேற்று என்னை அழைத்துச் சென்றார்.

இசையமைப்பாளர்களான சங்கர்- கணேஷ் இருவரிட மும் இவர்தான் எங்கள் கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பாடலை எழுதியதற்குப் பிறகு திரைப்பட உலகை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் என்னிடம், "கலைஞானி கமல்ஹாசன் அடிக்கடி உங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரைச் சந்தித்தால் புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்' என அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். திரையுலகைப் பற்றி பெரிதாக கனவொன்றும் எனக்கு இல்லாததால் அவருடைய அழைப்பினை நான் ஏற்காதிருந்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் நீங்கள் திரைப்படங்களில் எழுதவில்லை என்று என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வேறுவழியில்லை; நானும் சினிமாவில் பாடல்கள் எழுதியாகவேண்டும். இல்லா விட்டால் அவர்கள் ஏற்கெனவே எனக் குக் கொடுத்திருக்கும் "கவிஞர்' என்ற பட்டத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. எனவே கமலைச் சந்திக்க சம்மதம் சொன்னேன்.

பாலகுமாரன் மூலம் சந்திப்பு நிகழ்ந்த போது கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார். "உங்கள் இலக்கியத் தமிழை நான் மதிக்கிறேன். ஆனால், திரைப் படவுலகம் பெரும் வல்லமை மிக்கது. ஒரு படைப்பாளி அந்த ஊடகத்தையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் கவிதை லட்சம்பேரைச் சென்றடையும் என்றால், நீங்கள் எழுதும் திரைப்பாடல் கோடிக்கணக்கானவர்களை உடனடியாக ஓடிப்போய்த் தொட்டுவிடும்' என்று உபதேசித்து என்னை இயக்குனர் மனோபாலாவிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.

இயக்குனர் மனோபாலா அப்போது "ஆகாயகங்கை' என்ற திரைப்படத்தைத் தொடங்கியிருந்தார். அவர் என்னை பிரசாத் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று இசைஞானி இளையராஜாவின் முன்பு உட்கார வைத்து இவர்தான்

மு. மேத்தா என்றார். படித்திருக்கிறேன் என்று புன்னகைத்த இளையராஜா, பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான படங்களில் எழுதினேன்.''

நீங்கள் எழுதிய திரையிசைப் பாடல்களில்
உங்களைக் கவர்ந்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?

""உங்கள் குழந்தைகளில் உங்களுக்குப் பிடித்த குழந்தை எது என்று கேட்பதைப் போன்ற கடினமான கேள்வி இது. சில பாடல்களை வேண்டுமானால் நினைவுபடுத்தலாம். இசை ஞானி இளையராஜா இசையில் ரஜினி நடிக்க, பாலசந்தர் தயாரித்த "வேலைக்காரன்' படத்தின் ஒவ்வொரு பாடலும் என் உள்ளத்தில் ஈரமாய் ஒலிக்கிறது. "இரட்டைவால் குருவி' படத்தில் பாலுமகேந்திராவின் பார்வையில் "ராஜராஜ சோழன் நான்' என்ற பாடல் என் இதயத்தைத் தாலாட்டுகிறது. "சூரியவம்சம்' படத்தில் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனக்குள் அருவியாய் விழுகிறது. "பாடுநிலாவே' என்று என்னுள் "உதய கீதம்' கேட்கிறது. "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?' என "இதயக் கோயில்' என்னுள் எட்டிப் பார்க்கிறது.

"என் மனவானில் சிறகைவிரிக்கும் வண்ணப் பறவைகளே' என்று "காசி' யின் குரல் இதயத்தைத் தித்திப்பாய் தீண்டுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு' என்ற படத்தின் பாடல்கள், எங்களையும் சொல்லக்கூடாதா என்று ஏக்கத்தோடு கேட்கின்றன. வரிசைப்படுத்த முடியவில்லை. நான் எழுதிய பாடல்கள் எல்லாமே என் இதயத்தில் ஏறி, ரங்கராட்டினம் சுற்றுகின்றன.''

எதைநோக்கி உங்கள் இலக்கியப் பயணம்?
அதை எமக்கின்று அறிவிப்பீரா?

""என்னை நோக்குகிறவர்களை நோக்கி.''

இன்றைய இலக்கிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது எதுவோ?

""எழுது எழுது எழுது என்று உங்கள் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதுங்கள். எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங் கள். உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாமன்னன் ராஜராஜசோழனின் முகம் எந்த புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா இப்போது? எந்தப் புகழும் நிலையானதல்ல. இதை மனதில் நிறுத்துங்கள்.''

பிறப்பெனப்படுவது?

""சிறப்புகள் அடைவது.''

வாழ்வெனப்படுவது?

""வறுமையை வெல்வது.''

இறப்பெனப்படுவது?

""இனியதில் இனியது.''


நன்றி நக்கீரன்
சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்



3 செப்., 2012

பாராளுமன்ற முடக்கம் ; தினமும் 2 கோடி வீணாகிறது ...



பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 8-ந் தேதி தொடங்கியது. வரும் 7-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதற்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தினமும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டது. இதனால் பாராளுமன்றம் முடங்கியது.
8,9,16,17-ந் தேதிகளில் 4 நாட்கள் தவிர மற்ற நாட்களில் பாராளுமன்ற அலுவல்கள் முழுமையாக நடைபெறவில்லை. அந்த வகையில் மக்களவையில் 50 சதவீத அலுவல் நடக்க வில்லை. பாராளுமன்றத்தில் ஒரு நாள் அலுவலை நடத்தி முடிக்க வேண்டுமானால் ரூ.2 கோடி செலவாகும்.
பாராளுமன்ற முடக்கம் காரணமாக தினமும் ரூ.2 கோடி வரிப்பணம் வீணாகியது. தற்போதைய நிலவரப்படி 10 நாட்கள் மக்களவை, மாநிலங்களவையில் சிறு பணி கூட நடக்கவில்லை. இதற்கு மட்டும் ரூ.20 கோடி வீணாகி விட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்த நாட்களிலும் பாராளுமன்றம் முடங்கினால் மக்கள் வரிப்பணம் மேலும் வீணாகும் நிலை உள்ளது.

நன்றி நக்கீரன் 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் அமளிக்கிடையே பெண்கள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி, செப். 3-

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் நடத்த விடமாட்டோம் என்று முட்டுக்கட்டை போட்டு வருவதால், பாராளுமன்றத்தின் பணிகள் 9-வது நாளாக இன்றும் முடங்கியது. இனி வரும் நாட்களிலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிடப்பில் உள்ள முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் இழுபறி ஏற்பட்டது. ஆனால் அதற்கு முடிவு கட்டும் வகையில் இன்று, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 3 முக்கிய மசோதாக்கள் விவாதம் எதுவும் இன்றி நிறைவேற்றப்பட்டன.

வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான பெண்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை, அமைச்சர் கிருஷ்ணா தீரத் நிறைவேற்றினார்.

இந்த சட்டத்தின்படி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவம் நடந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இது தொடரும்பட்சத்தில் அபராதம் அதிகரிக்கும். அல்லது நிறுவனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படலாம்.

இதேபோன்று வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) திருத்த மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திருத்த மசோதா ஆகியவையும் கடும் அமளிக்கிடையே நிறைவேற்றப்பட்டது.


நன்றி மாலைமலர் 

பள்ளி வாகனங்களுக்கு 11 புதிய விதி முறைகள்: ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல்

சென்னை, செப்.3-

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் சியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி பள்ளிக்கூட பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானாள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச், மாணவி சுருதி பலியானது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து மேற்கொண்டது.

விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சட்ட விதிகளை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை வகுப்பதற்காக தமிழக அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது. அந்த கமிட்டி 11 விதிமுறைகளை வகுத்து தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் மாணவி சுருதி பலியான விபத்து வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை கொண்ட அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதில் மாணவ- மாணவிகள் பாதுகாப்புக்காக எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் அந்த 11 புதிய விதிமுறைகளை படித்து பார்த்தார். பிறகு அவர் கூறுகையில், தமிழக அரசு வகுத்துள்ள இந்த விதிமுறைகள் சிறப்பாக உள்ளன. இந்த விதிமுறைகளை முறையாக செயல் படுத்தினால் எதிர்காலத்தில் துயர சம்பவங்களை தடுக்க முடியும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரியாக திகழும் என்று பாராட்டினார். பிறகு அவர் இந்த வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளி வாகனங்களுக்கான 11 விதிமுறைகள் வருமாறு:-

1. தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012 அரசு இதழில் வெளியிடப்படும். அது வெளியிடப்படும் நாள் முதல் உடனடியாக அமலுக்கு வரும். இது தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளி வாகனங்களுக்கும் பொருந்தும்.

2.மோட்டார் வாகன விதிப்படி அனைத்து பள்ளி வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். உதவியாளர்கள், மாவட்ட குழு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி குழு, சிறப்புபடை ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

3.பள்ளிக்கூட பஸ்களை வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக்கூடாது. பள்ளி பேருந்துகள் முறையாக போக்குவரத்து துறையிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

4.பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் முறைப்படி உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தண்டனை பெற்றிருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் காக்கி உடை அணிந்திருக்க வேண்டும். அதில் டிரைவரின் பெயர் கொண்ட பேட்ஜ் அணிய வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்க கூடாது.

5.ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கண்டிப்பாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அந்த வாகனத்திலேயே செல்ல வேண்டும். அவர்கள் கண்டக்டர்களுக்கு உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பொறுப்பில் இருப்பவர்கள் 21 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மாணவ-மாணவிகளை கையாள்வதற்கு போதுமான பயிற்சிகள் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளி குழந்தைகளை பஸ்சில் ஏற்றி வருவது முதல் மாலையில் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக் கும்வரை உதவியாளர்கள் தகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவிகள் மட்டுமே செல்லும் வாகனமாக இருக்கும் பட்சத்தில் அந்த வாகனங்களில் பெண் உதவியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

6.பள்ளி வாகனங்கள் சரியாக பராமரிக்க படவேண்டும். ஒவ்வொரு பள்ளி பேருந்தும் செமிசலூன் டைப்பாக இருக்க வேண்டும். டெம்போ வேன் போன்று இல்லாமல் வாகனங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும். பள்ளி பேருந்துகள், வாகனங்கள் அனைத்துக்கும் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

தூரத்தில் இருந்து பார்க்கும்போதே இது பள்ளி வாகனம் என்று தெரியும் அளவுக்கு பெரிய அளவில் பள்ளியின் முத்திரை பொறிக்கப் பட்டிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் ஏறி இறங்கும் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில், எளிதாக மூடும் வகையிலும் இருக்கிறதா- என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

7.பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்லக்கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனங்களிலும் லாக் புக் பராமரிக்கப்பட வேண்டும். அந்த புத்தகத்தில் டிரைவர் தினமும் குறிப்பு எழுத வேண்டும். பஸ்சில் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டிருந்தால் அதுபற்றி டிரைவர்கள் தவறாமல் லாக்புக்கில் எழுதி வைக்க வேண்டும்.

8.பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வதற்கு சிறப்பு கமிட்டி அமைக்கப்படும். அந்த கமிட்டியில் பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறையினர், போலீசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், போக்குவரத்து அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இந்த கமிட்டி மாதந்தோறும் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும். இந்த கமிட்டியில் இருப்பவர்கள் டிரைவர்கள் குறிப்பு எழுதும் லாக் புத்தகத்தை வாங்கி சரிபார்க்க வேண்டும். அந்த புத்தகத்தில் பள்ளி பஸ்கள் பற்றி டிரைவர் ஏதேனும் குறிப்புகள் எழுதியிருந்தால் அதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து அதை சரிசெய்ய அறிவுறுத்த வேண்டும்.

9.மாவட்ட அஎளவிலும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். இந்த கமிட்டியில் வட்டார போக்குவரத்து அதிகாரி, போலீஸ் துணை சூப்பிரண்டு, மாவட்ட கல்வி அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள். இந்த கமிட்டி மாதம் ஒருதடவை கூடி பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்வார்கள். பள்ளி பேருந்துகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகிறதாப என்பதை உறுதி செய்வார்கள். இந்த கமிட்டியினர் பறக்கும் படையாகவும் செயல் படலாம். இதன் மூலம் பள்ளி பேருந்துகளில் செல்லும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கா விட்டால் வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு இது தொடர்பான தகவல்களை அனுப்பி கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய இந்த கமிட்டிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

10.பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்களும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மாதம் ஒருதடவை கூடி ஆலோசிக்க வேண்டும். தங்கள் கருத்துக்களை மற்றும் புகார்களை அவர்கள் பள்ளி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த புகார்கள் பள்ளி கமிட்டிக்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி கமிட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறும் குறைகளை உடன்குடன் நிவர்த்தி செய்ய உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

11.பள்ளி வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலத்தில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். மண்டல இணை போக்குவரத்து ஆணையர் தலைமையில் இந்த கமிட்டி செயல்படும். பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் குறித்து இந்த கமிட்டிதான் இனி முடிவு செய்யும்.

இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வகுத்துள்ள 11 புதிய விதிமுறைகளுக்கு பெற்றோர்கள் சார்பில் இந்த வழக்கில் வாதாடிய வக்கீல் ஜார்ஜ்வில்லியம்ஸ் வரவேற்றார். அவர் கூறுகையில், பள்ளிக்கு வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகளின் பாதுகாப்புக்காக இந்த கோர்ட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
நன்றி மாலைமலர் 

1 செப்., 2012

சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை

















கீரமங்கலம் வடக்கு நகரம் சன்னதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிய பாலத்தில் ஆபத்தான ஓட்டை ஏற்பட்டுள்ளது.

கீரமங்கலத்தில் இருந்து நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் செல்லும் சாலை பட்டுக்கோட்டை சாலையில் இருந்து நகரம் சன்னதி என்ற இடத்தில் பிரிகிறது. இந்த பிரிவு சாலையில் குறுகிய பாலம் இருந்தது. அதனால் பல விபத்துகள் நடந்தது. வாகன போக்குவரத்தும் அதிகமானதால் நகரம் பிரிவு சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் அமைக்கப்பட்டது. அதனால் அந்த இடத்தில் சாலை அகலமாக உள்ளது. எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்ல வசதியாக உள்ளது.

இந்த பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சில நாட்களாக கன மழையும் பெய்துள்ளது. மழை பெய்த பிறகு அந்த வழியாக சென்ற வாகனங்களின் எடை தாங்காமல் பாலத்தின் மைய பகுதியில் 2 அடி சுற்றளவிற்கு பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதே போல அதற்கு எதிரில் ஒரு இடத்திலும் ஓட்டை விழும் நிலையில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பெரிய ஓட்டை விழும் வாய்ப்பு உள்ளது.



இந்த வழியாக சைக்கிள், மோட்டார் சைக்கிள், மற்றும் நடந்து வருபவர்கள் எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் போதும் இரவு நேரங்களிலும் இந்த பெரிய ஓட்டையில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த ஓட்டையை உடனே சரி செய்வதுடன் மீண்டும் இது போல ஓட்டைகள் ஏற்படாமல் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி நக்கீரன் 

படங்கள் சொல்லும் நிலை

















படங்கள் உதவி தினமலர் 

படங்கள் சொல்லும் நிலை 
சிந்திக்கவும் வைக்கும்...