தினசரி செய்திகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினசரி செய்திகள்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 அக்., 2012

பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான 13 பஸ்கள் பறிமுதல்: தனிப்படை போலீசார் இன்று நடவடிக்கை

மதுரை, அக். 11- 

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். 

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பஸ்களை உடனடியாக பறிமுதல் செய்தனர். 

மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பஸ்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 13 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக். 11-

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு ஆபாச மெயில் அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும் முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.

10 அக்., 2012

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி, அக்.10-

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டத்தை மேலும் வலுவாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. அரசு ஊழியர்களின் நேர்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக பேணும் வகையிலும், ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அவநம்பிக்கை மற்றும் எதிர்மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம் செலுத்தவில்லை எனில், ஊழல்களை தடுக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்காது. மக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்து விடும்.
 மாலைமலர்  

9 அக்., 2012

பஸ்சில் ஓட்டை: மழையில் நனைந்த பயணிகள் நடுவழியில் இறங்கி போராட்டம்

கொடுமுடி, அக். 9-

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8.40 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் மழை கொட்டியது. இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழை தண்ணீர் ஒழுக தொடங்கியது. பயணிகள் லேசான ஒழுக்குதானே பின்னர் சரியாகிவிடும் என நினைத் தனர். ஆனால் ஈரோட்டில் மழை வெளுத்து கட்டியதால் ஒழுகுவது இன்னும் அதிகமானது. பயணிகளின் உடைகள், இருக்கைகள் முழுவதும் நனைந்து விட்டது. எங்கும் உட்காரவோ, நிற்கவோ இயலவில்லை.

இதைத்தொடர்ந்து பயணிகள் தங்கள் உடமைகளை தலைமீது வைத்து பஸ்சுக்குள் பயணம் செய்தனர். இந்த நிலையில் பஸ் 9.45 மணிக்கு கொடுமுடி வந்தது. அப்போதும் மழை நின்றபாடில்லை. இதனால் வெறுத்துபோன பயணிகள் பஸ்சைவிட்டு கீழே இறங்கினர். பின்னர் பஸ் முன்பு நின்று கொண்டு கண்டக்டரிடம் டிக்கெட் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கண்டக்டரும், டிரைவரும் கரூர்வரை வாருங்கள் அங்கு எங்கள் டெப்போ பஸ் வரும். அதில் ஏற்றி விடுகிறோம் என்று சொன்னதால் சமாதனம் அடைந்து மீண்டும் ஏறினர். கரூர் சென்ற பின்னர் பயணிகளை கண்டக்டர் வேறு பஸ்சில் ஏற்றி விட்டார். பயணிகளின் திடீர் போராட்டத்தால் கொடுமுடியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

7 அக்., 2012

18 மணி நேர மின்வெட்டால் கடும் அவதி: திருச்சியில் நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி, அக். 7-

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதாவது ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் இருந்தால் அடுத்த 3 மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டு வந்தது. இதனால் சிறு, குறுந்தொழில்கள் முற்றிலும் முடங்கின.

மேலும் வீடுகளில் மக்கள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்த மின்தடை நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு கீழப்புலிவார்டு ரோடு, இ.பி.ரோடு, அந்தோணியார் கோவில் தெரு, அண்ணா நகர், விறகுபேட்டை, கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்வெட்டை கண்டித்து இ.பி.ரோடு துணை மின்நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் மின்வெட்டுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டனர்.

ஆனால் முறையான பதில் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது கடுமையான மின்வெட்டை எதிர்த்தும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் காரணமாக இ.பி.ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த லாரியின் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் கோட்டை சரக உதவி போலீஸ் கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மின்சார விநியோகம் சீரானால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார், தாசில்தார் காதர்மொய்தீன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சாலை மறியலால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

6 அக்., 2012

காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை, அக் 6-காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்-
பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாவில் இணையும் விழா மேற்கு மாம்பலத்தில் இன்று நடந்தது. திருச்சி, தஞ்சை, விருது நகர், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., தே.மு.தி.க.வை சேர்ந்த 200 பேர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தனர். விடுதலை சிறுத்தை முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆர்வலனும் அந்த கட்சியில் இணைந்தார். அவர்களை மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை தொடர் பிரச்சாரங்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்று அங்குள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாநில அரசு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டவும், சுமூக தீர்வு காணவும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், கே.பி. ராகவன், ரவிச்சந்திரன், டால்பின் ஸ்ரீதர், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ், ஆறுமுகராஜ், செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ். பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி மாலைமலர் ...

கருத்து உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நீங்களே நேரில் பேசி வாங்கி  தரவேண்டியது தானே...

5 அக்., 2012

வாஷிங்டன்,அக்.4-


வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலம் மக்களை சந்திக்கும் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த முறை தொலைகாட்சி விவாதத்தில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளரான அதிபர் பராக் ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னியை சந்தித்தார்.

வரிகள், பற்றாக்குறை மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளின் மீது 90 நிமிட காரசார விவாதம் நடந்தது. இடையே இதுகுறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எதிக்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி 46.67 சதவிகிதம் வாக்குகள் பெற்று, 22.25 சதவிகிதம் வாக்குகள் பெற்ற அதிபர் வேட்பாளரான பராக் ஒபாமாவை தோற்கடித்தார்.

இந்த தலைப்புகளின் மீது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிட் ரோம்னி கம்பீரமாக பதிலளித்துள்ளார். ஆனால் அதிபர் பராக் ஒபாமா பதிலளிக்க தயங்கினார் என்று தொலைக் காட்சி நடுவர் கூறினார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தின் பிரதிபலிப்பு, நடைபெறவுள்ள தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் நான்கு முறை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. முதல் முறை நடந்த இந்த தொலைக்காட்சி விவாதத்தில் அதிபர் பராக் ஒபாமா தோல்வியை தழுவியுள்ளார்.
நன்றி மாலைமலர் 

மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி துரைதயாநிதி மனு: விசாரணை தள்ளிவைப்பு



துரைதயாநிதி மீது போடப்பட்ட கிரானைட் மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், துரைதயாநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்பு வந்தது.

விசாரணையில் துரைதயாநிதி தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துக்காக போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் புகார் கொடுக்க வேண்டியது கனிம வளத்துறை. அதற்கு மாறாக வருவாய் துறை அதிகாரியான விஏஓ ஒருவர் கொடுத்திருப்பது முரணானது. இந்த வழக்கில் நியமன பங்குதாரராக மட்டுமே மனுதாரர் இருந்தார். அதுவும் 2008ல் ராஜினாமா செய்துள்ளார். ஆக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேலும் மனுதாரர் தரப்பில், விசாரணை என்ற பெயரில் போலீசார் குடும்ப உறுப்பினர்களை கெடுபிடி செய்கிறது. அதை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டது.

அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியனோ, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கூடாது. மேலும் மனுதாரர் சம்மந்தப்பட்ட கம்பெனியில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதில் 2 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த வழக்கில் மேலும் பலரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது. முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்களையும் அனுமதித்துள்ளோம் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
=================================================
பொன்முடி முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம் சிகாமணி மற்றும் உறவினர் ராஜாமகேந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், வானூர் தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எங்கள் மீது செம்மண் அள்ளியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டத்தின் அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளதால் தாது பொருட்களை திருடியதாக குற்றம் சாட்ட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்கு இது. எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீது 5-ந் தேதி (நாளை) தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
நன்றி நக்கீரன் 





மின் துறை மந்திரி பங்கேற்ற விழாவிற்கு மின் திருட்டு செய்து வெளிச்சம் ( படங்கள் )


















திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற அதிமுக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.பி.சீனிவாசன் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது . இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன், மற்றும் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், முனுசாமி உள்பட எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட பொருப் பாளர்கள் பங்கேற்றனர்.


இந்த விழாவிற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதற் கெல்லாம் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து உபயோகம் செய்யப்பட்டது. கண்துடைப்புக்காக 2 ஜெனரேட்டர் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.


மின்சார தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இப்படி மின் துறை மந்திரி ஊரிலேயே அவர் பங்கேற்ற விழாவிற்கே திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.
நன்றி நக்கீரன் 

3 அக்., 2012

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ராஜ்கோட், அக்.3-

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப்பயணம், மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு பணம் ரூ.1,880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வெளியிட்டுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், தான் கூறிய தகவல் தவறானது என்று காங்கிரஸ் நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று மோடியும் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சோனியா குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகருக்கு இன்று (புதன்கிழமை) காலை 10 1/2 மணிக்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து நேராக மகாத்மா காந்தி தன் பள்ளிப்பருவத்தில் தங்கியிருந்த காந்தி சுமிருதிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் ஆசிரமம், பாலபவனுக்கும் சோனியா செல்கிறார்.

பின்னர் அவர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடக்கிற விவசாயிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாவின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படையினர் (கறுப்பு பூனை படையினர்) ஏற்கனவே ராஜ்கோட் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். நகர் முழுவதும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரேஸ் கோர்ஸ் மைதான பகுதியில் மட்டுமே ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சோனியா செல்லும் பாதையில் எல்லாம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன தணிக்கை, கண்காணிப்பும் நடந்து வருகிறது.
நன்றி மாலைமலர் 

சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு


சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு

லண்டன், அக். 2-

பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது 75-வது வயதில் அவர் மரணம் அடைந்தார். பிரான்ஸ் சென்று இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரது உயிர் பிரிந்தது.

அவர் எய்ட்ஸ் நோய் அல்லது மர்ம நோயினால் இறந்து இருக்கலாம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அராபத்துக்கு இஸ்ரேல் உளவாளி காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்து உள்ளது.

எனவே, அவரது உடலை சமாதியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாலஸ்தீனத்தில் ரமல்லா நகருக்கு பிரான்சை சேர்ந்த 3 நீதிபதிகள் அடுத்த வாரம் வர உள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் சமாதி உடைக்கப்பட்டு யாசர் அராபத் உடல் மீண்டும் பிரரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
நன்றி மாலைமலர் 

லிபியா: கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினர்தான் என்ற தகவலால் பரபரப்பு

லண்டன்,அக்.2- லிபியா: கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினர்தான் என்ற தகவலால் பரபரப்பு

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் முயாம்மர் கடாபி (69). துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும் கடாபி பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆப்பிரிக்க கூலிப்படையினரை வைத்து போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, அதிபர் கடாபியின் வெளிநாட்டு கணக்குகள் முடக்கப்பட்டன.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், லிபியா மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஒரு கட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி அரசுப் படைக்கு எதிராக சண்டையிட்டனர். கடாபியின் மகனை சிறைப் பிடித்தனர். அப்போதைய நிலைமையை சமாளிக்க அரண்மனையிலிருந்து ஓடி தலைமறைவானார் கடாபி.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம்தேதி, தனது சொந்த ஊரான சிர்டியில், கால்வாய் ஒன்றில் மறைந்திருந்த போது, நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள், கடாபியை சுற்றி வளைத்தனர். கடாபி சரணடைய முன்வந்த போதும், அவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோசியின் உத்தரவின் பேரில், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. இதுபற்றிய செய்தியை "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நன்றி மாலைமலர் ...

2 அக்., 2012

காந்தியைப் போல 520 மாணவ மாணவிகள் வேடம் அணிந்து உலக சாதனை!










திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 520 மாணவ மாணவிகள் காந்தியடிகளைப் போல் வேடம் அணிந்து உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி கூறும்போது,
இந்தியத் தாய்திருநாட்டின் மீது அண்ணல் காநதியடிகள் கொண்டிடருந்த பற்றி, இந்திய மக்களின் மீது கொண்டிருந்த அன்பு, அஹிம்சை முறையில் அவர் நடத்திய அறவழிப் போராட்டம், இன்றும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடப்படும் கத்தியின்றி ரத்தமின்றி, வாங்கப்பட்ட இந்திய சுதந்திரம் என்று எண்ணிலடங்கா அவருடைய நற்செயல்களை மாணவ மாணவிகளின் மனதில் பதிய வைக்கவும், அவருடைய வரலாறு மற்றும் நற்பண்புகளை அனைவரும் பின்பற்றும் நோக்கத்துடன் 520 மாணவ மாணவிகளை அண்ணல் காந்தியடிகளைப் போல் வேடம் அணியச் செய்து இந்த விழாவில் உலக சாதனையைப் படைத்துள்ளோம்.


ஒரே நேரத்தில் 520 பேர் தோன்றி மேடையில் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை தொடர்ச்சியாகப் பாடி உலகிலேயே மிக அதிகமானவர்கள் காந்தியடிகளைப் போல வேடமணிதல் எனும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளோம். இந்த புனிதமான உலக சாதனை நிகழ்விற்காக கடந்த 4 மாத காலம் காந்தியடிகள் பற்றியும் அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துரைத்து, அவர் பின்பற்றிய அஹிம்சை வழியையும் மாணவ மாணவிகளுக்கு உணர்த்தியுள்ளோம்.

அண்ணலின் பண்புகளை உணர்ந்து அவர் கருத்துகளால் ஈர்ப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் 520 பேரில் 58 பேர் அவரைப்போல் தோன்றுவதற்காக உண்மையாகவே தங்களுடைய தலைமுடியைக் காணிக்கையாக்கினார்கள்.

விழாவின் முடிவில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு எலைட் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய 3 உலக சாதனை நிறுவனங்களின் சான்றிதழ்கள் காந்தியடிகள் வேடம் புனைந்த 520 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. உடன் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் அண்ண-ன் வாழ்க்கை வரலாறு சத்திய சோதனை புத்தகத்தை வழங்கி அதை துணை பாடமாக சேர்க்கப்படவுள்ள தகவலும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
நன்றி நக்கீரன் 

1 அக்., 2012

வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

ராணிபேட்டை, அக்.1-வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 83) விவசாயி. இவரது மனைவி யசோதம்மாள் (75). இவர்கள் இருவரும் வாலாஜா ஜே.எம்.1 கோர்ட்டில் தங்களது மகன்கள் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மகனுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சரிசமமாக பிரித்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி கொடுத்து விட்டோம்.

இவர்கள் 6 பேரும் திருப்பாற்கடலில் தனித்தனியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். கஷ்டப்பட்டு 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துநல்ல நிலைக்கு அவர்களை உருவாக்கி, சொத்துக்களுடன் வாழ வழிவகை செய்துள்ளோம். ஆனால், பெற்றோரான எங்களை சாப்பாட்டுக்கே வழியின்றி அனாதையாக்கி விட்டனர். எனவே, எங்களுக்கு மாதம் தோறும் ஆகும் மருத்துவச்செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜராகி தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட வாலாஜா பேட்டை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அனுசுயா, இந்த வழக்கு தொடர்பாக 6 மகன்களையும் வரும் அக்.5ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி மாலைமலர் 

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது

ஓசூர்,அக்.1-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது
பெரியார். தி.க. பிரமுகர் பழனி கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்,அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்கிய வழக்கு உள்பட அடுத்தடுத்து பல வழக்குகள் ராமச்சந்திரன். வரதராஜன், லகுமய்யா ஆகியோர் மீது பாய்ந்தன. இதனால் இவர்கள் 3 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் செயலாளரும், தற்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான நாகராஜரெட்டி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி தளி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் இன்று காலை 10-25 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். நாகராஜரெட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே குட்டிநாகா, முனிராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலைமலர் 

29 செப்., 2012

தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நன்றி நக்கீரன் 

28 செப்., 2012

தமிழ்நாடே இருளில் மூழ்கியுள்ளது! டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு!



சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வடசென்னை திமுக சார்பில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வ- யுறுத்தியும், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். குறிப்பாக வியாசர்பாடி, மூலக்கடை ஆகிய மேம்பாலங்களை உடனே கட்டி முடிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றிய பிறகு, சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள், கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் காலரா பரவி வருகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் சென்னையில் காலரா இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாதிக்கப்படுவது மக்கள்தான். ஆகவே மக்களின் நலன் கருதி, சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாடே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் சீராக கிடைக்காததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குக்காக என்றும் பாடுபடக் கூடிய இயக்கம் திமுகதான் என்றார்.

நன்றி படம்: அசோக்...நக்கீரன் 

26 செப்., 2012

மண்ணில் உடலை புதைக்கும் போராட்டம்: வைகோ பங்கேற்பு

இடிந்தகரை,செப்.26-


கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத இடங்களில் கல்லறைக்குள் குடிபுகும் போராட்டமும் நடத்தினர்.

இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர்.இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் 12 மணிக்கு இடிந்தகரை வந்தார். இடிந்தகரையில் போராட்ட குழுவினரை அவர் சந்தித்து பேசினார். அப்போது உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய வைகோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் வைகோவும் ம.தி.மு.க தொண்டர்களுடன் மண்ணில் உடலை புதைக்கும் போராட்டத்தில் பங்கேற்றார். உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர் 

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: கடைகளில் கறுப்பு கொடி

சென்னை, செப். 25-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கறுப்பு கொடிகளை ஏற்றினர்.

சென்னையில் வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோயம் பேட்டில் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் எழும்பூரில் சங்க நிர்வாகிகளுடன் கடை கடையாக சென்று கருப்பு கொடி ஏற்றினார்.

இதில் பொதுச்செயலாளர் மோகன், பாண்டிய ராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் மாரித் தங்கம், சாமுவேல், கே.சி. பாபு, ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் விக்கிரம ராஜா பேசும்போது, அன்னிய முதலீட்டை ஒருபோதும் நுழைய விடமாட்டோம். இதற்காக ஒவ்வொரு வியாபாரிகளும் கடுமையாக போராடுவார்கள். இதன் முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள 20 லட்சம் வியாபாரிகள் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர் என்றார்.

பின்னர் விக்கிரமராஜா சென்னை முழுவதும் சென்று ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றினார்.

ஆலந்தூரில் பேரமைப்பு துணை தலைவர் ஆலந்தூர் பி.கணேசன் வீதி வீதியாக நிர்வாகிகளுடன் சென்று கறுப்பு கொடி ஏற்றினார். இதல் கதிரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநில துணை தலைவர் கொரட்டூர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினார். இதில் தலைவர் முருகேசன், செயலாளர் கோபால் ராஜ், பொருளாளர் வெங்கடேசன், கார்மேகம் பங்கேற்றனர்.

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தலைவர் ஜெயபால் தலைமையில் அம்பத்தூரில் கறுப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாநில பொதுச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் முகமது, பொருளாளர் தங்கதுரை, முகமது ஷெரீப், காசிராஜன், காவேரிமீரான், பிச்சைமணி, விஜயகுமார் பங்கேற்றனர்.

ஆவடி பெருநகராட்சி வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் 1000 கடைகளில் கறுப்புகொடி ஏற்றப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம்.துரைராஜன், பொதுச் செயலாளர் அய்யன் பவன் அய்யாதுரை, பொருளாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் தங்கதுரை, திருமாறன், முத்து, வெள்ளானூர் மாறன், ரமேஷ், மாதவன், சீனிவாசன் பங்கேற்றனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன், பல்லாவரம், கந்தன்சாவடி, குன்றத்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கண்ணகிநகர், ஒக்கியம் பேட்டை, கொட்டிவாக்கம், அடையார் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்பு கொடி ஏற்றினார்.

பல்லாவரத்தில் ராமச்சந்திரன், ஜெயபாண்டியன், செல்வராஜ், ராஜ்பத்ம நாபன், ரமேஷ், கோமஸ் பங்கேற்றனர்.

குன்றத்தூரில் சீனிவாசன், சி.எம்.சாமி, ரத்னவேல், அடையாறில் பாஸ்கர், செந்தில் ஆறுமுகம், பாலசுப்பிரமணி, பி.டி.சேகர் ஆகியோரும், கந்தன் சாவடியில் கோவிந்தராஜ், சண்முகம், வின்சென்ட், கார்த்திகேயன் ஆகியோரும், ஆதம்பாக்கத்தில் செல்வ குமார், தேசிகன், சின்னவன் ஆகியோரும், கொட்டி வாக்கத்தில் முத்துமாலை, ஹிலால், கணேஷ் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கண்ணகிநகரில் மைக்கேல்ராஜ், காமராஜ், முனுசாமி ஆகியோரும், மீனம்பாக்கத்தில் ராம்ராஜ், கிறிஸ்துவராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

25 செப்., 2012

சென்னையில் மின்வெட்டை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 25-

தமிழகத்தில் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, கூட்டுறவு சங்க தேர்தலில் போலியாக உறுப்பினர்களை சேர்ப்பது, செயல்படாத நிலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து இருந்தது.

அதன்படி தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் சென்னையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி காலத்தில் தொழில்வளம் பெருகியது. அதற்காக மின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை தவிர மற்ற இடங்களில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை இருந்தது உண்மை. ஆனால் அதையே காரணம் காட்டி, தான் ஆட்சிக்கு வந்தால் தடையில்லாத மின்சாரம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இன்று வெளி மாவட்டங்களில் 10 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

சென்னையில் தற்போது 1 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. நாளை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்போவதாக கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டவில்லை. தி.மு.க. ஆட்சியில் போது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுடன் பேசி 1000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால் இப்போது கவுரவ பிரச்சினையாக கருதி வாங்க தயங்குகிறார்கள்.

சென்னைநகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலுக்காக அ.தி.மு.க.வினரையே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். இவற்றை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர் தனசேகரன், அன்புதுரை, வேலு, மகேஷ்குமார், மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ஜெ.கருணாநிதி, சேப்பாக்கம் சுரேஷ்குமார், உதயசூரி யன், கே.கே.நகர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பிரியதர்ஷினி எம்.ஜி. சுரேஷ்குமார், சேலம் சுஜாதா, தாயகம் கவி, வி.எஸ்.ராஜ், சுப.முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர்