2 ஜூலை, 2012

ஹெல்மெட் கொள்ளையரிடம் போராடிய தாய், மகள்

திருவான்மியூர், ஜூலை. 1-
கத்தி முனையில் 15 பவுன் நகை பறிப்பு: ஹெல்மெட் கொள்ளையரிடம் 
போராடிய தாய், மகள் 
திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் சாலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் வசந்தி (24) சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தாயார் சாவித்திரி (54). மதுரை டி.வி.எஸ். நகரில் வசிக்கிறார். உறவினர் திருமண விழாவில் பங்கேற்க சாவித்திரி சென்னை வந்தார். திருமணம் முடிந்து திருவான்மியூரில் உள்ள மகள் வீட்டில் தங்கினார்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சூரிய உதயம் பார்க்க சாவித்திரி மகள் வசந்தியுடன் திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் சாவித்திரி அணிந்து இருந்த 15 பவுன் நகையை பறிக்க முயன்றனர். நகை கெட்டியாக இருந்ததால் சீக்கிரம் அறுபடவில்லை. சுதாகரித்துக்கொண்ட சாவித்திரி நகையை ஒரு கையால் பிடித்தபடி கொள்ளையர்களுடன் போராடினார். வசந்தியும் கொள்ளையனை தாக்கி கூச்சல் போட்டாள்.

உடனே கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை கீழே தள்ளினர். இதனால் தாய், மகள் பயந்தனர். உடனே 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவான்மியூரில் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறிக்கும் சம்பவம் தொடர் கதையாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.




1 ஜூலை, 2012

ஹேமமாலினி மகள் நடிகை இஷா தியோல் திருமணம்



தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியரின் மூத்த மகளான நடிகை இஷா தியோல் திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. அவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை மணந்தார்.

இந்தி திரைப்பட நட்சத்திர ஜோடி தர்மேந்திரா- ஹேமமாலினி தம்பதியின் மூத்த மகள் இஷா தியோல். இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான இஷா தியோலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்தது. அப்போது அவர்கள் மோதிரம் மாற்றி கொண்டனர்.

இந்த நிலையில் அவர்களது திருமணத்தையொட்டிய விழா கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடந்து வந்தது. இஷா தியோல்-பாரத் தக்தானி திருமணம் நேற்று காலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடந்தது. இதற்காக மணமகன் பாரத் தக்தானி வெள்ளை குதிரையில் அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளையை தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினர் வரவேற்றனர்.

இஷா தியோல் சிவப்பு மற்றும் தங்க சரிகை கொண்ட காஞ்சீபுரம் பட்டுச்சேலை அணிந்து இருந்தார். இந்த சேலை சென்னையில் வாங்கப்பட்டு, அதில் கூடுதலாக சில அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் பாரத் தக்தானி குர்தா அணிந்து இருந்தார். மராட்டிய பாரம்பரியத்தின் தலைப்பாகையும் அவர் அணிந்து இருந்தார். இந்த ஜோடியின் திருமணம் தென்னிந்திய பாரம்பரியத்துடன் இந்துமுறைப்படி நடந்தது.

திருமண ஜோடியை ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்து வந்து வாழ்த்தினர். குறிப்பாக அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சனுடன் வந்து வாழ்த்தினார். மனோஜ் குமார், வினோத் கன்னா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்பட பலர் வந்திருந்தனர்.

இஷா தியோல்-பாரத் தக்தானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளது.







சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம்

சென்னை, ஜூலை. 1- 

சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன்: நடிகை குஷ்பு ஆவேசம் 

திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார்.

தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து பேசினார்.

கூட்டத்தில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பால், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள், குண்டர் சட்டங்கள் பாய்கிறது.

இந்திய வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, தி.மு.க.வினரை பழிவாங்கும் அரசாகவே செயல்படுவது அ.தி.மு.க. மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

தி.மு.க.வினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அ.தி.மு.க. மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. தி.மு.க.வினர் மீதே காவல் துறைக்கு கவனம் இருக்கிறது.

ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம்.

எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. தி.மு.க.வின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள்.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

கூட்டத்தில், பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்....

நல்ல தில் தான் உங்களுக்கு...

பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2


திரைவட்டாரத்தில் சமீபத்திய பரபரப்பான பேச்சாக இருப்பது துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிம்புவும், தனுஷும் இணைந்து 
 
’கொலவெறி’பாடல் பாடியது தான். 

தமிழ் சினிமாவில் எதிர் எதிர் துருவங்களாகவே இருந்த இரு நடிகர்கள் திடீரென கட்டிப்பிடித்து மேடையில் பாட்டு பாடவும், அங்கு எழுந்த கைதட்டலில் அரங்கமும் அதிர்ந்தது, இருவரையும் எதிரிகளாக்கியே பேசிக்கொண்டிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள்.

வேட்டை மன்னன், வாலு, போடா போடி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு, அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாராம். சிம்புவின் அடுத்த படம் புதுக்கதை இல்லையாம். ஏற்கனவே வெளியான மன்மதன் படத்தின் தொடர்ச்சி தானாம். படத்திற்கான கதை எழுதிக்கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்திற்கு ’மன்மதன்-2’ என பெயரிட்டுள்ளார்.

சிம்புவின் முதல்காதல் தோல்வியில் முடிந்தது. மன்மதன் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் சிம்பு தன் முதல் காதல் அனுபவத்தைத் தான் மன்மதன் படமாக எடுத்திருக்கிறார் என பரப்பரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு சிம்பு நயன்தாராவை காதலித்து, இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் என் இரண்டாவது காதல் அனுபவத்தை படமாக எடுப்பேன் என அறிவித்திருந்தார்.

சிம்புவின் கடைசி காதலியான நயன்தாராவும் தனது இரண்டாவது காதலில் தோல்வியடைந்த பின்னர் தான் சிம்பு இந்த படத்திற்கு கதை எழுத ஆரம்பித்தார். எனவே மன்மதன்-2 ல் சிம்புவின் இரண்டாவது காதலியின் கதாபாத்திரமும் வரலாம் என்பது கோடம்பாக்கத்து செய்தி.

மன்மதன்-2 படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைத்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறதாம் சிம்பு தரப்பு. அனுஷ்கா ஏற்கனவே சிம்புவுடன் வானம் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் த்ரிஷா, தமன்னா, சிந்து துல்லானி, மந்திரா பேடி ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்கவிருக்கிறார்களாம். 

சிம்புவின் நண்பனாக சந்தானம் கதை முழுக்க வலம் வருகிறாராம்.

 பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2,வெற்றிக்கு 
அவர் பங்கும் உழைப்பும் ஒருப்பக்கமும் அடுத்து   கிசுகிசும் கைகொடுக்கும் 


கோஷ்டிப்பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி புதுத்திட்டம்



ஸ்டாலினால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த கட்சி பிரமுகர்கள் சிலரை கருணாநிதி திடீரென அழைத்துப் பேசியுள்ளது தி.மு.க.,வில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதை கனிமொழியின் செல்வாக்கை உயர்த்தும் நடவடிக்கையாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். உச்சகட்டத்தை நெருங்கி வரும் கோஷ்டிப் பூசலை சமாளிக்க, கட்சியின் மாநில நிர்வாகத்தை அதிரடியாக மாற்றி அமைக்க, கருணாநிதி புதுத்திட்டம் வகுத்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒப்புதல் வாக்குமூலம்:"ஒரு சில மாவட்டங்களில் உள்ள கோஷ்டிப்பூசல்களை, வரும் 4ம் தேதி நடக்கும் சிறை நிரப்பும் போராட்டம் ஒற்றுமைப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீர் அடித்து நீர் விலகி விடுமா என்ன?' என்ற உருக்கமான கடிதத்தை தி.மு.க., தலைவர் கருணாநிதி சமீபத்தில் வெளியிட்டார். "தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் பட்டொளி வீசி பறக்கிறது' என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக இந்த கடிதம் அமைந்தது.

பொதுக்குழுவில் பிரச்னை:"தி.மு.க., வின் அடுத்த தலைவராக வருவதற்கான தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது' என, ஏற்கனவே பொதுச்செயலர் அன்பழகன் பல முறை வெளிப்படுத்தினார். அந்தப் பேச்சு, கருணாநிதியின் எண்ணத்தில் உதித்தவை என, அப்போது விமர்சனம் எழுந்தது. ஆனால், இந்த எண்ணத்தை மாற்றும் வரையிலான சம்பவங்கள் தி.மு.க., பொதுக்குழுவில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக, ஸ்டாலின் ஆதரவாளர்கள் நாற்காலியை தூக்கி அடிக்க பாய்ந்த போது, கருணாநிதி மிகவும் வேதனை அடைந்தார்.

கோபம் தீரவில்லை:இந்த சம்பவங்களுக்கு ஸ்டாலின்தான் காரணம் என நினைத்த கருணாநிதி அவர் மீது கோபம் கொண்டுள்ளார்; அதனால் தான், ஸ்டாலின் அதிருப்தி அடையும் வகையில் சில முடிவுகளை தலைவர் வேண்டுமென்றே எடுக்கிறார்; கனிமொழியின் கோஷ்டியை பலப்படுத்தும் வகையில் அவரை கொம்பு சீவி விடுகிறார், என இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில், சமீபத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவில் ஸ்டாலினின் மனைவி துர்காவை அழைத்திருந்தனர். விழாவில் பங்கேற்க வந்த துர்கா, அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கனிமொழியின் ஆதரவாளர்கள் என்பதுதான் காரணம். தனது கணவரின் தொகுதியிலேயே, கனிமொழியின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் அதிகரித்து விட்டதே என்ற அதிர்ச்சியோடு துர்கா புறப்பட்டு சென்றுள்ளார்.

கனிக்கு பச்சைக்கொடி:கட்சியில் கனிமொழிக்கு செல்வாக்கை அதிகரிக்க, ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவர்கள், சி.ஐ.டி., காலனியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கருணாநிதியின் ஒப்புதலோடுதான் இந்த கூட்டங்கள் நடக்கின்றன என்பது ஸ்டாலின் தரப்பை சூடாக்கியுள்ளது.அதோடு, ஸ்டாலின் ஆதரவாளரான ஈரோடு மாவட்டச் செயலர் ராஜா, கருணாநிதியை சந்திக்க வந்தபோது, பார்க்க விரும்பவில்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர் ஒருவர், விருப்பம் தெரிவித்த இடத்தில், சிறைநிரப்பும் போராட்டத்தின் விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தாமல், கனிமொழியின் விருப்பப்படி தாம்பரத்தில் பொதுக்கூட்டம் பேச கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


மாநில நிர்வாகத்தில் மாற்றம்:ஸ்டாலினுக்கு நெருக்கமான பொன்முடி, வேலு, நேரு போன்ற எட்டு மாவட்டச் செயலர்களுக்கு மாநில நிர்வாகிகள் பதவி வழங்கி, அந்த மாவட்டங்களை இரண்டாக பிரித்து கனிமொழியின் ஆதரவாளர்களுக்கு மாவட்டச்செயலர் பதவி வழங்குவதற்கான ஆலோசனையும் நடந்துள்ளது.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு, மாநில அளவில் பொறுப்புகளை வழங்கி, தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஸ்டாலினுடன் நெருக்கமாக பழகிய காந்தி, பரணி குமார், ரெட்டி, ஜின்னா, சிவாஜி போன்ற பிரமுகர்கள் சமீபகாலமாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தனர். தற்போது, அவர்களை கருணாநிதி அழைத்து பேசி, அரவணைத்து வருகிறார். ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்ட பிரமுகர்களை கருணாநிதி அழைத்து முக்கியத்துவம் கொடுப்பது, உள்ளர்த்தத்தோடு கட்சித் தலைமை செயல்படுவதையே வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறை நிரப்பும் போராட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி பங்கேற்பு?வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி, கனிமொழி பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ளது. கண்புரை சிகிச்சையை ஸ்டாலின் மேற்கொண்டதால், தற்போது அவர் தனது கண்களில் மருந்து ஊற்றி ஓய்வு எடுத்து வருகிறார். வரும் 4ம்தேதிக்குள் போதுமான ஓய்வு அவருக்கு கிடைத்து விட்டால், தனது எம்.எல்.ஏ., வின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தலைமை ஏற்று மறியல் போராட்டத்தில் பங்கேற்பார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறை நிரப்பும் போரட்டத்தில் பங்கேற்க கோர்ட் அனுமதி பெறவும் கனிமொழி முடிவு செய்துள்ளதால், வரும் 2ம்தேதி டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் கனிமொழி சார்பில் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்கிறார். போராட்டத்தில் பங்கேற்க நீதிபதி அனுமதி அளித்தால், அவர் சிதம்பரத்தில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா போன்றவர்கள் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்செயலர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால், மூத்த முன்னாள் அமைச்சர்கள் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் பங்கேற்கலாம் என, கூறப்படுகிறது.



நன்றி -நமது நிருபர் -தினமலர் 

இந்த படமே கொஞ்சம் நெருடலை தருகிறது...கட்சியில் யாருக்கு இன்றைய 
செல்வாக்கு என்ற வாக்கு எதிரொலியா என்று....

உங்கள் முடிவு உங்கள் வாய் மூலம் தெளிவாய் வரும் வரை குழப்பம் தான் தலைவரே ...