16 ஜூன், 2012

பிரணாப் முகர்ஜி...ஒரு பார்வை


கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர் பிரணாப் முகர்ஜி!



ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக 77 வயதான பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் கிங்கர் முகர்ஜியின் மகன் ஆவார்.
பிரணாப், அரசியல் அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். கல்லூரி ஆசிரியராக அவர் வாழ்க்கையை தொடங்கினார். சிறிது காலம், வக்கீலாகவும், பத்திரிகையாளராகவும் கூட பணியாற்றினார்.
பின்னர், 1960களில் தீவிர அரசியலில் குதித்தார். மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனார். 1969ம் ஆண்டு, டெல்லி மேல் சபை எம்.பி. ஆனார். தொடர்ந்து மேல் சபை மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.
முதல்முறையாக, 2004ம் ஆண்டில்தான், மேற்கு வங்காள மாநிலம் ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்.பி. ஆனார். அதே தொகுதியில், 2009ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
1973ம் ஆண்டு, இந்திரா காந்தி மந்திரிசபையில் தொழில்வள மேம்பாட்டு துறை மந்திரியாக பதவி ஏற்றார், பிரணாப் முகர்ஜி. தொடர்ந்து 9 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தார்.
1980ம் ஆண்டு, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனபோது, அவரது மந்திரிசபையில் நிதி மந்திரி ஆனார். இந்திரா காந்தி இல்லாத சமயங்களில், பிரணாப் முகர்ஜிதான், மத்திய மந்திரிசபை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவது வழக்கம்.
டெல்லி மேல் சபையின் ஆளுங்கட்சி தலைவராகவும் இருந்தார். அப்போதுதான், தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அப்போது ராஜீவ்காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரணாப் முகர்ஜி, காங்கிரசை விட்டு விலகினார்.

ஓரிரு ஆண்டுகளில், அவர் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். உடனே மீண்டும் பழைய முக்கியத்துவத்தை பெற்றார். 1987 ம் ஆண்டில் இருந்து 1989 ம் ஆண்டுவரை, காங்கிரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவராக இருந்தார்.

பின்னர், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில், திட்ட கமிஷன் துணைத்தலைவராகவும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பிரணாப் முகர்ஜி பதவி வகித்தார்.
மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது மந்திரிசபையிலும், தற்போதைய இரண்டாவது மந்திரிசபையிலும்  நம்பர் 2' ஆக திகழ்ந்து வருகிறார், பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, மத்திய அரசுக்கு சிக்கல் நேரும்போதெல்லாம், அதற்கு தீர்வு காண இவரைத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பயன்படுத்துவது வழக்கம். பல்வேறு கட்சிகளிலும் நண்பர்களை கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி, சிக்கல்களுக்கு லாவகமாக தீர்வு காண்பார்.
பிரணாப் முகர்ஜி, கூர்ந்த அறிவாற்றலுக்கும், ஞாபக சக்திக்கும் பெயர் பெற்றவர். எத்தனையோ வரலாற்றுச் சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்து சொல்வார். அதனால் அவரை நடமாடும் கலைக்களஞ்சியம்' என்று அழைப்பார்கள். அரசியல் சட்டத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். பாராளுமன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில் கண்டிப்பானவர்.
பிரதமர் பதவியை தவற விட்ட பிரணாப் முகர்ஜிக்கு, தற்போது ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கனிந்துள்ளது.

வெற்றி நிச்சியமாய் இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்குள் மனவேற்றுமை 
நிகழ்ந்து விட்டது உண்மை...

அரசியல் சதுரங்கத்தில் யாருக்கு தான் பலம் வெற்றி வாய்ப்பு என்று பொறுத்து இருந்து பார்ப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக